திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளில் ரேஷன் அரிசியை கர்நாடக மாநிலத்தின் பெங்களூரு, ஆந்திர மாநிலத்தின் குப்பம் உள்ளிட்ட வெளிமாநிலங்களுக்கு டன் கணக்கில் கடத்திச் செல்வதும்; அவ்வப்போது துறை சார்ந்த அலுவலர்கள் பிடிப்பதும் தொடர்கதையாக இருந்து வருகிறது.
இந்நிலையில், இன்று (ஜனவரி -14) அதிகாலை திருப்பத்தூர் அருகே ஜோதிமங்கலம் பகுதியில் திருப்பத்தூர் காவலர்கள் ரோந்துப்பணியில் ஈடுபட்டிருந்தபோது, பெங்களூரு பதிவு எண் கொண்ட பிக்கப் வாகனத்தில் 50 மூட்டைகளில் சுமார் 3 டன் எடையுள்ள ரேஷன் அரிசி கடத்தப்படுவது குறித்த தகவல் கிடைத்துள்ளது.
இதையறிந்து காவலர்கள் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருந்தனர். சந்தேகத்திற்குரிய அந்த வாகனத்தை காவல் துறையினர் மடக்கிப் பிடிக்க முற்பட்டபோது, அந்த வாகனத்தை இயக்கிய நபர் தப்பியோடினார்.
இதனால், அங்கிருந்த வாகனத்தைப் பறிமுதல் செய்த காவல்துறையினர் வாகனத்துடன் இருந்த 3 டன் அரிசியைப் பறிமுதல் செய்து திருப்பத்தூர் வட்ட வழங்கல் அலுவலர் கண்ணனிடம் ஒப்படைத்தனர்.
மேலும் கடத்தல் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
இதையும் படிங்க: 'தீராக் காதல்' - ஒற்றை ஆளாக யானைகளை விரட்டும் 'சிங்கப் பெண்'!