வேலூர், திருப்பத்தூர் மாவட்டங்களில் ரேஷன் கடை அரிசி மூட்டைகள் கடத்தப்பட்டு வெளி மாநிலங்களுக்கும், வெளி மாவட்டங்களுக்கும் விற்பனை செய்யப்பட்டு வருவதாக காவல்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து, ஆம்பூரை அடுத்துள்ள மாதனூர் அருகே அமைக்கப்பட்டுள்ள வேலூர் திருப்பத்தூர் மாவட்ட எல்லை சோதனைச் சாவடியில் இன்று (ஆகஸ்ட் 2) காலை வருவாய்த்துறை, காவல்துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது, வேலூரிலிருந்து ஆம்பூரை நோக்கி வந்த லாரியை மடக்கி பிடிக்க முற்பட்டனர். இதனிடையே, லாரியை நிறுத்திவிட்டு ஓட்டுநர் தப்பியோடியதை அடுத்து, காவல்துறை, வருவாய் துறை அலுவலர்கள் லாரியை சோதனை செய்தனர். அதில் லாரியில் 15 டன் ரேஷன் அரிசி இருந்தது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து, லாரியை பறிமுதல் செய்த வருவாய் துறை அலுவலர்கள் அதனை வட்டாட்சியரிடம் ஒப்படைத்தனர்.
இது குறித்து ஆம்பூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டதன் பேரில் வழக்குப் பதிவு செய்த கிராமிய காவல் துறையினர், தப்பியோடிய ஓட்டுநரை தேடி வருகின்றனர்.