திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் தொகுதியில் அமமுக கூட்டணியின் சார்பில் போட்டியிடும் எஸ்டிபிஐ வேட்பாளரான உமர் ஃபாரூக், வாக்குப்பதிவு நிறைவு பெற்ற நிலையில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, ”ஆம்பூரில் திமுகவும் அதிமுகவும் கொஞ்சமும் சளைக்காமல் பணப் பட்டுவாடாவில் ஈடுபட்டனர். இரு கட்சிகளும் வீடுகளுக்குள்ளும், வாக்குச்சாவடிகளிலும் பணத்தை வாரி இரைத்ததை நாங்கள் ஆதாரங்களுடன் தேர்தல் ஆணையத்திற்கு புகார் அளித்தும், அதற்கான எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை.
தேர்தல் நடக்கும் பூத்களில் அதிமுக ஏஜெண்டுகளின் கையில் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் உருவப்படம் மற்றும் வாக்களிப்பீர் இரட்டை இலைக்கு போன்ற வாசகங்கள் அடங்கிய கைப்பைகள் அனைத்து பகுதிகளிலும் இருந்தன. அதேபோல திமுகவும் கடந்த மூன்று நாட்களாக இரவு நேர பணப்பட்டுவாடா வில் ஈடுபட்டனர். அதோடு வாக்குச்சாவடிகளுக்கு அருகிலேயே கூட பணம் கொடுத்ததை நேரிலேயே கண்கூடாக பார்த்து கவலையுற்றோம்.
இதுகுறித்து தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால், நீதிமன்றத்தை நாட இருக்கிறோம். ஆம்பூரில் சுமார் பத்துக்கும் மேற்பட்ட பூத்களில் மறுவாக்குப்பதிவு நடத்த வேண்டும். தோல்வி பயத்தால் இரு கட்சிகளும் பொதுமக்கள் மனதை திசை திருப்பும் நடவடிக்கையில் ஈடுபட்டது வேதனை அளிக்கிறது” எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: தண்டையார்பேட்டையில் திமுக - அதிமுகவினரிடையே மோதல்: ஒருவர் மண்டை உடைப்பு!