திருப்பத்தூர் : விநாயகபுரம், ராஜமங்கலம், அனேரி உள்ளிட்ட பல பகுதிகளிலிருந்து திருப்பத்தூரிலுள்ள ராமகிருஷ்ணா கான்வென்ட், அரசு பூங்கா உயர்நிலைப்பள்ளி, ஸ்ரீ மீனாட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி உள்ளிட்ட பள்ளிகளுக்கு சுமார் 200-க்கும் மேற்பட்ட மாணவர்கள் அன்றாடம் பேருந்தில் சென்று கல்வி பயின்று திரும்புகின்றனர்.
இந்நிலையில், தினமும் பள்ளிக்குச் சென்று திரும்புதற்கு ஏதுவாக கூடுதல் பேருந்து வசதி செய்துகொடுக்க வேண்டும் என பள்ளி மாணவ-மாணவியர்கள் அரசு பேருந்தை சிறைபிடித்து சாலை மறியலில் ஈடுபட்டனர். இது குறித்து பள்ளி மாணவிகள் கூறும்போது, “நாங்கள் பள்ளிக்கு காலை, மாலை என இருவேளைகளிலும் ஒரே பேருந்தில் சென்று திரும்புகிறோம். இதற்கிடையே பேருந்தில் அனைவருக்கும் இடம் கிடைக்காததால், அநேகமான நாள்களில் நாங்கள் படியிலேயே பயணம் செய்கின்ற நிலைக்கு தள்ளப்படுகிறோம்.
இதனிடையே, சில மாணவர்கள் பேருந்தின் படிக்கட்டுகளில் பயணித்து அடிக்கடி கீழேயும் விழுந்து காயமடைந்ததும் நடந்தேறியது. இதே போன்ற ஆபத்தான பயணத்தினால் மாணவர்கள் உயிரிழக்காமல் இருக்க, எங்கள் பகுதியில் பள்ளிக்குச் சென்று வர கூடுதலாக பேருந்துகள் இயக்கவேண்டும்.
ஏற்கனவே 7.45 மணிக்கு விநாயகபுரத்தில் கிளம்பி 8.45 மணிக்கு எங்கள் பகுதிக்கு பேருந்து வந்து சேருகிறது. இதனைத் தொடர்ந்து, காலை 8.15 மணிக்கு இன்னொரு பேருந்தை விட வேண்டும்” என கோரிக்கை வைத்தனர். இதனைத் தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு வந்த போக்குவரத்து அலுவலர் மற்றும் திருப்பத்தூர் கிராமிய காவல் உதவி ஆய்வாளர் அகிலன் ஆகியோர் இதன்பொருட்டு, நடவடிக்கை எடுப்பதாகக் கூறினர். தொடர்ந்து போராட்டத்தை கைவிட்ட பள்ளி மாணவ-மாணவிகள் பேருந்தில் ஏறிச் சென்றனர்.
இதையும் படிங்க: Viral Video : ஆபத்தை உணராத மாணவர்கள் - அரசின் நடவடிக்கை என்ன?