தமிழ்நாட்டில் வேகமாகப் பரவும் கரோனா தொற்றால் வெளி மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து சேலம் வரும் நபர்கள், மாவட்ட எல்லைகளில் தடுக்கப்பட்டு கரோனா வைரஸ் நோய் தொற்று உள்ளதா என பரிசோதனை செய்யப்படுகிறது. அவ்வாறு பரிசோதனை மேற்கொண்ட நபர்களில் 29 பேருக்கு கரோனோ நோய் தொற்று உறுதி செய்யப்பட்டு, அவர்கள் அனைவரும் சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்தனர்.
இந்த நிலையில் சிகிச்சை முடிந்து, மேட்டூர், ஆணையம்பட்டி, கருப்பூர், மேட்டுப்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 13 நபர்கள் வீடு திரும்பினர். அவர்களை அரசு மருத்துவமனை முதல்வர் பாலாஜி நாதன் பூங்கொத்து கொடுத்து வழியனுப்பி வைத்தார்.
இவர்களைத் தவிர மேலும் 29 பேர், சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது. அதேபோல், சென்னையைச் சேர்ந்த நிறைமாத கர்ப்பிணி ஒருவர் பிரசவத்திற்காக சென்னையில் இருந்து திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் உள்ள தாய் வீட்டிற்கு வந்துள்ளார். இந்நிலையில் அவருக்கு கடந்த 12ஆம் தேதி மேற்கொள்ளப்பட்ட சோதனையில் கரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதியானது.
இதனையடுத்து நிறைமாத கர்ப்பிணியான அவர் வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. அவருக்கு வைரஸ் தொற்று குணமான நிலையில், கடந்த புதன்கிழமை பிரசவம் நடந்தது. அதில் அவருக்கு அழகான பெண் குழந்தை பிறந்துள்ளது. இந்நிலையில் தாயும், சேயும் நலமுடன் இன்று வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இதையும் படிங்க: மதுரையில் மேலும் இருவருக்கு கரோனா!