திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே உள்ள வடச்சேரி கிராமத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியின் தலைமை ஆசிரியராக(பொறுப்பு) அருண் குமார் பணியாற்றி வருகிறார். பள்ளியில் மொத்தம் 650 மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். மேலும் நடந்து முடிந்த பன்னிரண்டாம் வகுப்பு தேர்வில் 82 விழுக்காடு மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ள நிலையில், தமிழ்நாடு அரசு உத்தரவின்படி கடந்த 24ஆம் தேதி முதல் இப்பள்ளியில் 6ஆம் வகுப்பு முதல் 11ஆம் வகுப்பு வரை மாணவர்களுக்கான சேர்க்கை நடைபெற்று வருகிறது.
மாணவர்கள் சேர்க்கையின் போது ஆளும் கட்சியை சேர்ந்த ஆசிரியர் கழக தலைவர் வேலுமணி தலைமையில் பொருளாளர் ஆதிமூலம், லஷ்மிகாந்தன் ஆகியோர் பள்ளியில் சேர வரும் மாணவர்களிடம் நன்கொடையாக ரூ. 500 முதல் இரண்டாயிரம் வரை வசூல் செய்து வருகிறார்.
இச்செயல் கடந்த 10 ஆண்டுகளாக நடைமுறையில் உள்ளதாக கூறப்படுகிறது. கரோனா தொற்றால் கடந்த மார்ச் மாதம் முதல் இன்று வரை அரசின் பல்வேறு தடுப்பு நடவடிக்கை காரணமாக பொதுமக்கள் வேலையின்றி தவித்து வரும் நிலையில் ஆளும் கட்சியினர் பள்ளியில் சேர மாணவர்களிடம் நிதி வசூல் செய்வதால் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் செய்வதறியாது தவித்து வருகின்றனர். எனவே, இது குறித்து சமந்தப்பட்ட துறை அலுவலர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாதிக்கப்பட்ட மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
இதையும் படிங்க: கல்லூரி முதலாமாண்டு மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் தொடங்க உத்தரவு!