திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டம், சேம்பரை கிராமத்தில் வேன் கவிழ்ந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தாருக்கு ஆறுதல் மற்றும் நிவாரண உதவி வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், 'திருப்பத்தூர் மாவட்டம், நெல்லிவாசல்நாடு மதுரா புலியூர் கிராமத்தைச் சேர்ந்த சுமார் 30க்கும் மேற்பட்ட நபர்கள் சேம்பரை கிராமத்தில் அமைந்துள்ள கோயிலுக்கு வேன் மூலம் சென்றபோது எதிர்பாராதவிதமாக வேன் கவிழ்ந்து பள்ளத்தில் விழுந்தது.
அந்த விபத்தில் புலியூர் கிராமத்தைச் சேர்ந்த பரசுராமன் என்பவரின் மனைவி துர்கா, அவரது மகள்கள் பவித்ரா, சர்மிளா, துக்கன் என்பவரின் மனைவி செல்வி, வேந்தன் என்பவரின் மனைவி சுகந்தரா மற்றும் குள்ளப்பன் என்பவரின் மனைவி மங்கை ஆகிய ஆறுபேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துவிட்டனர். இந்த துயரமான செய்தியினைக் கேட்டு மிகுந்த வேதனையடைந்தேன்’ என்று குறிப்பிட்டுள்ளார்.
உயிரிழந்தோரின் குடும்பத்துக்கு நிவாரண நிதி: மேலும், 'உயிரிழந்தவர்களின் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன். மேலும், இதே விபத்தில் சுமார் 22 நபர்கள் படுகாயம் அடைந்துள்ளார்கள். அவர்களுக்கு திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் சிறப்பு சிகிச்சைகள் அளிக்கவும் மீட்புப் பணிகளை துரிதமாக மேற்கொள்ளவும் உத்தரவிட்டுள்ளேன்.
இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தாருக்கு தலா இரண்டு லட்சம் ரூபாயும், படுகாயம் அடைந்தவர்களுக்குத் தலா ஐம்பதாயிரம் ரூபாயும் உடனடியாக முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து நிதியுதவி வழங்கிட உத்தரவிட்டுள்ளேன்’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:நாழு தழுவிய போராட்டம்... இலங்கை முழுவதும் முழு ஊரடங்கு...