வேலூர் மாவட்டத்தில் நேற்று (ஆகஸ்ட் 1) மாலை முதல் இரவு வரை கனமழை பெய்தது. குறிப்பாக வேலூர் மாநகர பகுதிகளில் கனமழை கொட்டித் தீர்த்ததால், சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. மேலும் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது.
அதேநேரம், வேலூர் கோட்டைக்கு எதிரே இருக்கும் மக்கான் அம்பேத்கர் நகரிலுள்ள நகர்புற ஆரம்ப சுகாதார நிலையம் மழைநீரால் சூழப்பட்டதால் பணியாளர்கள் , நோயாளிகளும் சிரமத்துக்கு ஆளாகினர். அங்குள்ள மருத்துவ அலுவலரின் அறை, கணினி அறை, தடுப்பூசி போடும் இடம் உட்பட அனைத்து அறைகளுமே தண்ணீரால் சூழப்பட்டது.
மேலும் மாத்திரைகள் வைக்கப்பட்டிருந்த மேஜைகள், நோயாளிகளின் படுக்கை என அனைத்துமே தண்ணீரில் தத்தளித்தன. மழைக்காலங்களில் மக்கான் பகுதி நகர்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் மழைநீர் புகும் சம்பவம் நீடிப்பதால், சுகாதார நிலையத்திலேயே நோய்த்தொற்று ஏற்படும் அபாயம் உள்ளதாகவும், மின்சாரப் பொருள்கள் இயங்குவதால் மின் சேதம் ஏற்படும் அபாயமும் உள்ளதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.
எனவே மழை நீரை வெளியேற்றவும், வரும் காலங்களில் மழை நீர் தேங்காமல் இருக்கவும் மாவட்ட நிர்வாகமும், மாநகராட்சி நிர்வாகமும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதனிடையே இதுகுறித்து தகவலறிந்து வந்த வேலூர் மாநகராட்சி ஊழியர்கள், நகர்புற ஆரம்ப சுகாதார நிலையத்தின் உள்ளே இருந்த மழை நீரை அகற்றினர்.
இதையும் படிங்க: பலுசிஸ்தான் மாகாணத்தில் வெள்ளம்... 124 பேர் உயிரிழப்பு... 10 ஆயிரம் வீடுகள் நாசம்...