திருப்பத்தூர்: ஆம்பூர் அடுத்த சோமலாபுரம் சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையை ஒட்டியுள்ள வீரக்கோவில் பகுதியில் ரயில்வே மார்க்கத்தில் உள்ள தண்டவாளத்தில் மர்மநபர்கள் பெரிய அளவிலான கற்களை வைத்துள்ளனர்.
இந்நிலையில், இந்த ரயில்வே மார்க்கத்தில் இன்று காலை மைசூரில் இருந்து ஆம்பூர் வழியாக சென்னைக்கு செல்லக்கூடிய காவிரி எக்ஸ்பிரஸ், ஆம்பூரை கடந்து வீரக்கோவில் பகுதியில் வந்து கொண்டிருந்த போது தண்டவாளத்தில் வைக்கப்பட்ட கற்கள் மீது மோதியுள்ளது. இதில் பயங்கர சத்தம் கேட்டவுடன் ரயிலை இயக்கக்கூடிய லோகோ பைலட் விரைவு ரயிலை அருகில் இருந்த பச்சகுப்பம் ரயில் நிலையத்தில் நிறுத்தி சோதனை செய்துள்ளார்.
இதையும் படிங்க: திடீர் ஓட்டுநர் அவதாரம் எடுத்த பெண்கள்: மின்சார வாகனத்துடன் மல்லுக்கட்டியதால் விபரீதம்
அப்பொழுது ரயில், தண்டவாளத்தில் வைக்கப்பட்டிருந்த கற்கள் மீது மோதியது தெரியவந்தது. உடனடியாக இதுகுறித்து ரயிலின் லோகோ பைலட் ஜோலார்பேட்டை ரயில்வே காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் சம்பவ இடத்தில் ஜோலார்பேட்டை ரயில்வே காவல் ஆய்வாளர் தமிழரசி தலைமையில் காவல்துறையினர் தண்டவாளத்தில் கற்களை வைத்த மர்மநபர்கள் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் தண்டவாளத்தில் கற்கள் வைத்த மர்மநபர்களைக் கண்டறிய சென்னையிலிருந்து மோப்பநாய் உடன் ரயில்வே பாதுகாப்புப் படை அதிகாரிகள் குழு இன்னும் சற்று நேரத்தில் சம்பவ இடத்தில் விசாரணையைத் தொடங்க உள்ளதாக ஜோலார்பேட்டை ரயில்வே காவல்துறையினர் தெரிவித்தனர். மேலும் ரயில் தண்டவாளத்தில் கற்களை வைத்த சம்பவம் ஆம்பூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதே போல் கடந்த 2ஆம் தேதியன்று கன்னியாகுமரி நோக்கி சென்று கொண்டிருந்த விரைவு ரயில் திருச்சி அருகே தண்டவாளத்தில் கிடந்த டயர் மீது மோதி பாதிப்படைந்தது. கன்னியாகுமரி விரைவு ரயில் திருச்சி வாளாடி பகுதியில் சென்று கொண்டிருந்தபோது, தண்டவாள்த்தில் மர்ம நபர்கள் லாரி டயர் ஒன்றைப் போட்டு வைத்துள்ளனர். வேகமாக வந்த ரயில் டயர் மீது மோதியது.
இதனால், ரயிலில் 4 பெட்டிகளில் மின் இணைப்பு பாதிக்கப்பட்டது. உடனடியாக ரயில் நிறுத்தப்பட்டு ரயில்வே ஊழியர்கள் விரைந்து வந்து பாதிப்படைந்த மின் இணைப்பை சரி செய்தனர். மேலும் வேறு ஏதும் பிரச்னை உள்ளதா என்று சரிபார்க்கப்பட்டு ரயில் தாமதமாக புறப்பட்டது. இது போன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடைபெறுவதால் ரயில்வே ஊழியர்கள் மத்தியில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.
இதையும் படிங்க: West Bengal: இரண்டு சரக்கு ரயில்கள் மோதி விபத்து