திருப்பத்தூர்: ஆம்பூர் அடுத்த துத்திப்பட்டு ஊராட்சி மன்றத் தலைவர் சுவேதா. இவரது கணவர் கணேசன். இவர், கடந்த அக்டோபர் மாதம் கோயம்புத்தூர் பகுதியில் வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியை மாநகராட்சி அலுவலர்போல் நடித்து வைரம், தங்க நகைகளை கொள்ளையடித்துச் சென்றதாகக் கூறப்படுகிறது.
இது குறித்து வழக்குப்பதிவு செய்த கோயம்புத்தூர் குற்றப்பிரிவு காவல் துறையினர், விசாரணையைத் தொடங்கினர். விசாரணையில் ஏற்கனவே கணேசன் மீது நான்கு பிரிவுகளில் கொள்ளை வழக்குகள் நிலுவையில் இருப்பது தெரியவந்தது. இந்நிலையில், இன்று காலை (டிசம்பர் 6) துத்திப்பட்டு பகுதியிலுள்ள அம்பேத்கர் சிலைக்கு கணேசன், அவரது மனைவி ஆகியோர் மாலை அணிவிக்கச் சென்றனர்.
அப்போது அங்கு வந்த காவல் துறையினர், கணேசனை கைதுசெய்து கைவிலங்கு மாட்டியுள்ளனர். இதனையடுத்து கணேசனின் ஆதரவாளர்கள் குற்றப்பிரிவு காவலர்களைத் தாக்கி கைவிலங்கை இயந்திரம் மூலம் அவிழ்த்து அங்கிருந்து தப்பியுள்ளனர்.
இந்நிலையில் காயமடைந்த காவலர்கள் ஆம்பூர் அரசு மருத்துவமனையில் தற்போது சிகிச்சைப் பெற்றுவருகின்றனர். இது குறித்து திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலகிருஷ்ணன் உத்தரவின்பேரில் ஆம்பூர் காவல் துணைக் கண்காணிப்பாளர் சரவணன் தலைமையிலான காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.
இதையும் படிங்க: வாடகைக்கார்களை அடமானம் வைத்த ஆசாமி - 12 கார்கள் மீட்பு