இந்தியாவில் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களை காப்பாற்ற மருத்துவர்கள், செவிலியர்கள், துப்புரவுப் பணியாளர்கள் தீவிரமாக பணியாற்றி வருகின்றனர். இதுவரை கரோனாவுக்கு மருந்து கண்டுபிடிக்கப்படாத சூழ்நிலையில் தகுந்த இடைவெளியை கடைபிடித்தால் மட்டுமே கரோனா வைரஸ் பிடியில் சிக்காமல் தப்பிக்கலாம் என்று மருத்துவர்கள் தொடர்ந்து அறிவுறுத்தி வருகின்றனர்.
இந்த சூழ்நிலையில் திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டையில் அமைச்சர் தலைமையில் நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் தகுந்த இடைவெளி பின்பற்றப்படாத சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அதாவது பத்திரப் பதிவு துறை அமைச்சர் கே.சி. வீரமணி இன்று தனது ஜோலார்பேட்டை தொகுதியில் வசிக்கும் 72 ஆயிரம் குடும்ப அட்டைதாரர்களுக்கு அரிசி வழங்குவதற்கு நிகழ்ச்சி ஒன்றை ஏற்பாடு செய்திருந்தார். அதன்படி இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் சிவனருள், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
அத்தியாவசியப் பொருட்களை கொடுப்பதற்காக ஜோலார்பேட்டை சுற்று வட்டாரத்தில் இருந்து ஆயிரக்கணக்கான மக்களை அதிமுகவினர் வாகனங்களில் அழைத்து வந்தனர். அரசியல் கட்சி பரப்புரை போல் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் ஏராளமான மக்களுக்கு அமைச்சர் கே.சி. வீரமணி நிவாரணப் பொருட்களை வழங்கினார். இருப்பினும் கரோனா வைரஸ் தமிழ்நாட்டில் தீவிரமாக பரவி வரும் நிலையில் அதிமுகவினரின் இச்செயல் அப்பகுதி மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: ஊரடங்கு உத்தரவை காற்றில் பறக்கவிட்ட குடிமராமத்துப் பணிகள்