திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடியை அடுத்த உதயேந்திரம் பேரூராட்சியில் தூய்மைப் பணியாளர்களுக்கு அரிசி, மளிகைப் பொருள்கள் அடங்கிய தொகுப்பினை வழங்கும் நிகழ்ச்சி பேரூராட்சி அலுவலக வளாகத்தில் நடை பெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு வாணியம்பாடி சட்டப்பேரவை உறுப்பினர் ஜி.செந்தில் குமார் தலைமை வகித்தார். முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் கோவி சம்பத்குமார் முன்னிலை வகித்தார். பேரூர் கழகச் செயலாளர் சரவணன் அனைவரையும் வரவேற்ற நிலையில், சிறப்பு அழைப்பாளராக முன்னாள் அமைச்சர் கே.சி வீரமணி கலந்து கொண்டு தூய்மைப் பணியாளர்களுக்கு நிவாரணப் பொருள்களை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த கே.சி.வீரமணி பேசியதாவது: ”கடந்த திமுக ஆட்சியில் இருண்ட மாநிலமாக விட்டுச் சென்ற தமிழ்நாட்டை அதிமுக அரசு சவாலாக எடுத்து மிகை மின் மாநிலமாக மாற்றியது. தற்போது திமுக ஆட்சிக்கு வந்த உடன் மீண்டும் மின் பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. வாக்களித்த மக்கள் தான் புரிந்து கொள்ள வேண்டும்.
அதிமுகவின் தலைமை ஆலோசனையின் பேரில் காட்பாடி சட்டப்பேரவைத் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்ட ராமு, குறைந்த வாக்கு வித்தியாசத்தில் தோல்வி அடைந்ததாக அறிவிக்கப்பட்டு, திமுக வேட்பாளர் துரைமுருகன் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டதை அடுத்து, முறையான மறு வாக்கு எண்ணிக்கை நடத்தக்கோரி ராமு சென்னை உயர் நீதமன்றத்தில் வழக்கு தொடர்ந்து உள்ளார். இந்த வழக்கு குறித்த முறையாக விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும்” என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், “கடந்த அதிமுக ஆட்சியில் கரோனா கட்டுப்படுத்தப்படவில்லை என அமைச்சர் சேகர் பாபு கூறியுள்ளார். கடந்த ஆட்சியில் இருந்த போது 10 ஆயிரத்துக்கும் கீழ் கரோனா பாதிப்புகள் இருந்தன. தற்போது 30லிருந்து 40 ஆயிரம் வரை பாதிப்புகள் அதிகரித்துள்ளன. கடந்த ஆட்சியின்போது முதலமைச்சரும், மற்ற அமைச்சர்களும் உயிரைப் பணயம் வைத்து, ஒரு உயிரிழப்புகூட நிகழக் கூடாது என முக்கியத்துவம் கொடுத்து, நோய்த்தொற்றை கட்டுக்குள் கொண்டு வந்தோம்” என்றார்.
தொடர்ந்து எல்.கே.பி வாசுவிடம் சசிகலா பேசிய ஆடியோக்கள் வெளியானது குறித்து கே.சி.வீரமணி கூறுகையில், ”தினகரன் அணி, சசிகலா அணி இரண்டும் வேறு, வேறு அல்ல. இரண்டுமே ஒரே அணிதான். ஏற்கனவே அவர் அந்த அணியைச் சேர்ந்தவர் தான். அவர் கட்சியிலிருந்து நீக்கப்பட்ட நிலையில், தான் தினகரனுடன் சென்றது தவறு என மெதுவாக உணர்ந்தார். பின்னர் மீண்டும் கட்சியில் சேர்க்கப்பட்டு அவருக்கு பதவி வழங்கப்பட்டது. ஆனால் மீண்டும் அவர் தவறான பாதைக்குச் செல்கிறார். ஒரு குற்றவாளியை அவ்வப்போது திருத்த நினைக்கின்றோம் என்றால் அவர் திருந்த வேண்டும். ஆனால் அவர் தான்தோன்றித்தனமாக செயல்பட்டு வருகிறார். அதனால் கட்சியில் இருந்து அவர் மீண்டும் நீக்கப்பட்டுள்ளார்” எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: பிரபல தாபா உரிமையாளர் தற்கொலை முயற்சி!