திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அருகே உள்ள தமிழ்நாடு - ஆந்திரா எல்லை பகுதிகளில் கள்ளச் சாராயம் காய்சுவதாக ரகசிய தகவல் கிடைத்தது. இதன்படி, வாணியம்பாடி துணை காவல் கண்காணிப்பாளர் பழனி செல்வம், மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல் ஆய்வாளர் தமிழரசி ஆகியோர் தலைமையிலான 10 பேர் கொண்ட காவல்துறையினர் குழுவினர் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது, அங்கு சாராயம் காய்ச்சிக் கொண்டு இருந்த 3 பேர், காவல்துறையினர் வருவதைக் கண்டு, அங்கிருந்து தப்பி ஓடி தலைமறைவாயினர். அங்கு சென்ற காவல்துறையினர், சாராயம் காய்ச்சுவதற்காக, தயாராக இருந்த 10 ஆயிரம் லிட்டர் ஊறல் மற்றும் 250 லிட்டர் கள்ளச்சாராயத்தை கைப்பற்றி அழித்தனர்.
மேலும், தப்பியோடிய அதே பகுதியைச் சேர்ந்த பெருமாள், பொன்னுசாமி, சின்ன தம்பி ஆகிய மூன்று பேரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
கரோனா ஊரடங்கு காலத்தில் மது கடைகள் மூடப்பட்டுள்ளதால், வெளிமாநிலத்திலிருந்து மதுபாட்டில்கள் கடத்தி வந்து அதிக விலைக்கு விற்பனை செய்வதும், தமிழ்நாடு - ஆந்திரா எல்லை பகுதிகளில் கள்ளச்சாராய காய்ச்சுவதும் அதிகரித்து வருகிறது.
கடந்த 2 நாட்களுக்கு கர்நாடக மாநிலத்தில் இருந்து விற்பனைக்கு கொண்டு வரப்பட்ட ரூ.5 லட்சம் மதுபாட்டில்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர், காவல்துறைக் குழுவினருடன் நேரில் சென்று பறிமுதல் செய்து, 2 பேரை கைது செய்தனர்.
கடந்த ஒரு மாதத்தில், வாணியம்பாடி மதுவிலக்கு காவல்துறையினர் ஆயிரக்கணக்காண லிட்டர் சாராய ஊறல் அழித்து உள்ளனர். மேலும் வெளிமாநில மதுபாட்டில்களையும் பறிமுதல் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: வழிநெடுகில் காத்திருந்த மக்களிடம் காரை நிறுத்தி மனு பெற்ற ஸ்டாலின்