திருப்பத்தூர் மாவட்டம், குரிசிலாப்பட்டு பகுதியில் வசிப்பவர், முருகானந்தம் என்பவரின் மனைவி மணியம்மாள் (28). இவர் சமீபத்தில் குரிசிலாப்பட்டு பகுதியிலிருந்து கலந்திராவை நோக்கி தனியார் பேருந்தில் கைக்குழந்தையுடன் தனியாக பயணம் செய்துள்ளார். அப்பொழுது தன்னுடைய கைப்பையில் வைத்திருந்த இரண்டு சவரன் நகை மற்றும் ஆயிரம் ரூபாய் ரொக்கப் பணத்தை தவறவிட்டுள்ளார்.
பணத்தை தொலைத்ததை அறிந்து திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலகிருஷ்ணனிடம் மணியம்மாள் புகார் அளித்தார். அதனைத்தொடர்ந்து மாவட்ட துணை காவல் கண்காணிப்பாளர் சாந்தலிங்கம் தலைமையில் தனிப்பிரிவு அமைத்து விசாரித்து வந்ததில், ஏலகிரி அத்தனாவூர் பகுதியைச்சேர்ந்த இரண்டு பெண்கள் மணியம்மாள் பேருந்தில் தவறவிட்ட நகை மற்றும் பணத்தை எடுத்துச் சென்றதாகத் தெரியவந்தது.
இதனைத்தொடர்ந்து நகை மற்றும் பணத்தை மீட்டுக் கொண்டுவந்து மணியம்மாளிடம் இன்று காவல் துறையினர் ஒப்படைத்தனர்.
2 சவரன் நகை தானே என்று அலட்சியம் காட்டாமல் புகார் தெரிவித்த உடனேயே தனிப்பிரிவு அமைத்து விசாரித்து குறுகிய நாட்களில் நகையை காவல்துறையினர் மீட்டுக்கொடுத்த சம்பவம் பொதுமக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
இதையும் படிங்க:சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை முக்கிய கொள்கை விளக்கக்குறிப்பு