திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி ஆம்பூர்பேட்டை பகுதியில் அமைந்துள்ளது, நூற்றாண்டுகள் பழமைவாய்ந்த சுந்தர விநாயகர் ஆலயம். இந்த ஆலயம் ஊரடங்கு காரணமாக கடந்த 3 மாதங்களாக பூட்டப்பட்டிருந்த நிலையில், ஆகஸ்ட் 1ஆம் தேதி முதல் சிறு கோயில்களில் வழிபாடு நடத்திக் கொள்ளலாம் என அரசு அறிவித்ததையடுத்து திறக்கப்பட்டது.
கோயில் நிர்வாகிகள் கோயிலைத் திறந்து வழிபட வந்தபோது, கோயில் கோபுரத்தின் மேல் இருந்த கோபுர ஐம்பொன் கலசம் காணாமல் போயிருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து அவர்கள் அளித்தப் புகாரின் பேரில், வாணியம்பாடி நகர காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டதில், கலசம் கண்டுபிடிக்கப்பட்டது. கண்டுபிடித்த காவல் ஆய்வாளர் சந்திரசேகருக்கு பக்தர்கள் நன்றி தெரிவித்தனர். ஆய்வாளர் சந்திரசேகர் முன்னிலையில் கோயில் நிர்வாகிகள், பக்தர்கள் கலசத்தைப் பெற்றுச் சென்றனர்.