திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி சென்னாம்பேட்டை பகுதியில் பாலாற்றங்கரையோரமாக தொடர்ந்து கள்ளச்சந்தையில் ஆட்டோவில் வைத்து மதுபானங்கள் விற்பனை செய்துவருவதாகப் புகார்கள் எழுந்தன.
மேலும் செப்டம்பர் 2ஆம் தேதி இரவு மதுபானம் விற்பவர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டதாக காவல் துறைக்குப் புகார் தெரிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து நேற்று முன்தினம் இரவு (செப் 3) சென்னாம்பேட்டை பகுதியில் நகரக் காவல் ஆய்வாளர் கோவிந்தசாமி தலைமையில் காவல் துறையினர் தணிக்கையில் ஈடுபட்டனர்.
அப்போது பாலாற்றங்கரையோரமாக மறைவான இடத்தில் ஷேர் ஆட்டோ ஒன்று நிறுத்திவைக்கப்பட்டிருந்தது. அந்த ஆட்டோவின் அருகே காவல் துறையினர் சென்று விசாரித்தபோது அதில் பெருமாள்பேட்டை பகுதியைச் சேர்ந்த தாமோதரன் என்பவர் டாஸ்மாக் சரக்குகளை விலைக்கு வாங்கி கள்ளச்சந்தையில் விற்பது தெரியவந்தது.
இதனைத் தொடர்ந்து ஆட்டோவில் வைத்து விற்பனை செய்யப்பட்டுவந்த மூன்று கேஸ்களிலிருந்த 144 குவார்ட்டர் மதுபாட்டில்களைப் பறிமுதல்செய்த காவல் துறையினர் ஆட்டோவையும் பறிமுதல்செய்து தாமோதரனைக் கைதுசெய்து விசாரணை மேற்கொண்டனர்.
மேலும் ஆட்டோவில் அமர்ந்து குடித்துக்கொண்டிருந்த இருவரையும் காவல் துறையினர் பிடித்து விசாரணை நடத்தினர்.