திருப்பத்தூர் மாவட்ட அரசு பொது மருத்துவமனையில் இரண்டாவது கட்டமாக முன் களப் பணியாளர்களுக்கு கரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கப்பட்டது. திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் சிவனருள் முதலில் தடுப்பூசியை போட்டுகொண்டார். பின்னர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார் கரோனா தடுப்பு ஊசியை போட்டுக்கொண்டனர்.
இவர்களைத் தொடர்ந்து மாவட்ட துணை காவல் கண்காணிப்பாளர் தங்கவேல், மாவட்ட ஆட்சியரின் நேரடி உதவியாளர் வில்சன் ராஜசேகர், கிராமிய காவல் ஆய்வாளர் சிரஞ்சீவி ஆகியோருக்கும் தடுப்பூசி போடப்பட்டு அதற்கான சான்றிதழும் வழங்கப்பட்டன.
தொடர்ந்து முன் களப்பணியாளர்கள் வரிசையில் இருக்கும் காவல்துறை, வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சித் துறை, ஊடகம் மற்றும் பத்திரிகை துறை ஆகிய துறைகளைச் சார்ந்த அனைத்து அலுவலர்களுக்கும் திருப்பத்தூர் மாவட்டத்திற்குட்பட்ட வாணியம்பாடி, ஆம்பூர் போன்ற பகுதிகளில் உள்ள 6 சமுதாய சுகாதார நிலையங்களிலும் 4 அரசு பொது மருத்துவமனையிலும் தடுப்பூசி போடப்பட்டது.
தடுப்பூசியை செலுத்திக் கொண்டவர்கள் அனைவரையும் 30 நிமிடங்கள் காத்திருக்கச் செய்து வேறு ஏதேனும் ஒவ்வாமைகள் ஏற்படுகிறதா என்று கண்காணித்தனர். எந்தவித ஒவ்வாமையும் இல்லாத அனைவருக்கும் அடுத்த 28 நாள்களுக்குப் பின்பு இரண்டாவது தடுப்பூசி போட்டுக்கொள்ள அறிவுறுத்தப்பட்டது. ஏற்கனவே கடந்த மாதம் 16ஆம் தேதி திருப்பத்தூர் அரசு பொது மருத்துவமனையில் முதல் கட்டமாக சுகாதார பணியாளர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டது.
இதுவரை 307 பேருக்கு போடப்பட்டுள்ள நிலையில் தற்பொழுது முன் களப்பணியாளர்களுக்கு தடுப்பூசி போடும் பணி தொடங்கப்பட்டுள்ளது. தடுப்பூசி போடும் பணியின்போது தலைமை மருத்துவர் திலீபன் மருத்துவர்கள் சுமதி, சிவகுமார், மனோஜ் தலைமை செவிலியர் ரோஸி மற்றும் செவிலியர்கள் உடனிருந்தனர்.
இதையும் படிங்க:கரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட திருவண்ணாமலை ஆட்சியர்!