திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் நகராட்சிக்குள்பட்ட ரெட்டித்தோப்பு சாலை கம்பிக்கொல்லை, பெத்தலேகம், மற்றும் மலைப்பகுதிகளான நாயக்கனேரி, பனங்காட்டேரி ஆகிய பகுதிகளில் வசிக்கும் சுமார் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் பயன்படுத்தும் பிரதான சாலையாக உள்ளது ரெட்டித்தோப்பு ரயில்வே பாலச்சாலை.
ஆனால் இந்த ரயில்வே பாலத்தில் மழைக்காலங்களில் அதிகளவு தண்ணீர் தேங்குவதால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் இச்சாலையை கடக்க பெரிதும் சிரமத்திற்குள்ளகின்றனர்.
இதனால் இப்பகுதியில் ஓர் ரயில்வே மேம்பாலம் அமைக்க இப்பகுதி மக்கள், அரசு அதிகாரிகள் மற்றும் அரசியல் கட்சியினரிடம் பல ஆண்டுகளாக மனு அளித்தும் இதுவரையில் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக்கூறி இன்று ( 06.10.2020) ஒரு நாள் ரெட்டித்தோப்பு, கம்பிக்கொல்லை, பெத்தலேகம் பகுதிகளில் செயல்படும் அனைத்துவிதமான கடைகளையும் அடைத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்படப்போவதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்படப்போவதாக துண்டு பிரசுரங்களை அச்சடித்த தனியார் அச்சகத்திற்கு கோட்டாட்சியர் தலைமையிலான அதிகாரிகள் நேற்று மாலை சீல் வைத்தனர். பின்னர் காலை முழுவதும் ரெட்டித்தோப்பு பகுதியில் ஆம்பூர் காவல் நிலைய துணை கண்காணிப்பாளர் தலைமையிலான 50க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
அப்போது தொடர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சுமார் 100க்கும் மேற்பட்ட ஆண்கள் மற்றும் பெண்களை காவல் துறையினர் கைது செய்து தனியார் மண்டபத்தில் அடைத்து வைத்துள்ளனர்.