திருப்பத்தூர்: தில்லை நகர் திருத்தி மேடு பகுதியில், ஆதி திராவிடர் சமூக மக்களுக்காக சுமார் 18 ஆண்டுகளுக்கு முன்பு இலவசமாக இடம் ஒதுக்கப்பட்டு, சுமார் 200-க்கும் மேற்பட்ட வீடுகளில் பொதுமக்கள் வசித்து வருகின்றனர்.
இந்நிலையில் இந்தப் பகுதியிலுள்ள மக்கள் சொந்தமாக வீடு கட்டியும் அந்த வீட்டிற்குள் வாழ முடியாத அவல நிலையில் தவித்து வருகின்றனர்.
இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், 'எங்கள் பகுதியில் சாலை, குடிநீர், கால்வாய், மின்சாரம் என எந்த அடிப்படை வசதியும் நகராட்சியின் மூலமாக எங்களுக்கு கிடைக்கவில்லை. சுதந்திரமடைந்து 75 ஆண்டுகள் கடந்தும் இன்னும் எங்கள் பகுதி இருண்டு கிடைக்கிறது.
எங்கள் பகுதி முழுவதும் நகராட்சியின் மூலம் சுத்தம் செய்யப்படாமல் முள்ளும் புதருமாக இருப்பதால் பாம்புகளின் நடமாட்டம் அதிக அளவில் உள்ளது.
இதனால் இரவில் தைரியமாக நடமாட முடிவதில்லை. மழை பெய்து விட்டால் சேறும் சகதியுமாக சாக்கடை கழிவுகள் தேங்கி குளம்போல் நின்றுவிடுகிறது.
வேதனையில் பொதுமக்கள்
இதுபோன்ற பல பிரச்னைகளுக்கு நடுவில் நாங்கள் வீடு கட்டியும்; அந்த வீட்டிற்குள் வாழ முடியாத அவல நிலையில் தவித்து வருகிறோம். இது குறித்து துறை சார்ந்த அலுவலர்களுக்குப் பலமுறை மனு கொடுத்தும் கண்டுகொள்ளாமல் எங்களை அலைக்கழித்து வருகின்றனர்.
இதற்கு மேலும் காலம் தாழ்த்தாமல் துறை சார்ந்த அலுவலர்கள் எங்கள் மேல் கருணைகொண்டு நடவடிக்கை எடுக்காவிட்டால் வீதிக்கு, வந்து போராடக் கூடிய கட்டாயத்திற்கு தள்ளப்படுவோம். எனவே, உடனடியாக எங்கள் பகுதிக்குத் தேவையான அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும்' என்றார்.
இதையும் படிங்க: ஐ.பி.யின் தொகுதியில் மலைவாழ் மக்களுக்கு வீடு கட்டிக்கொடுத்த பாமக!