திருப்பத்தூர்: கடந்த இரண்டு வாரங்களாக பெய்துவரும் பருவமழையால், தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்கள் பாதிப்புகளுக்கு உள்ளாகியுள்ளன. குறிப்பாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு போன்ற மாவட்டங்களில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.
மேலும் பல மாவட்டங்களில் கனமழை காரணமாக சாலையில் தேங்கிய மழை நீர் இன்றும் வடியாமல் உள்ளன. அதனை அப்புறப்படுத்தக் கோரி அந்தந்த மாவட்ட மக்கள், மாவட்ட நிர்வாகத்திடம் வலியுறுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த அம்பேத்கர் நகர் பகுதியில், கடந்த சில நாள்களாக பெய்த கனமழையால், குடியிருப்பு பகுதிகளில் வெள்ள நீர் புகுந்தது. மழை நின்ற பின்பும் நீர் வடியாமல் சாலையில் தேங்கியுள்ளதால், பள்ளி, கல்லூரி மற்றும் பணிக்கு செல்வபவர்கள் பெறும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.
இதனால் வெள்ள நீரை அப்புறப்படுத்தக் கோரி, அப்பகுதி மக்கள் மாவட்ட நிர்வாகத்திடம் பலமுறை கூறியும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த மக்கள் இன்று (நவ. 22) காலை, ஆம்பூர் - பேர்ணாம்பட் சாலையில், சுமார் மூன்று மணி நேரத்திற்கும் மேலாக சாலை மறியலில் ஈடுபட்டனர்.
பின்னர் இச்சம்பவம் குறித்து தகவலறிந்த காவல்துறையினர் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தையில் ஈடுப்பட்டனர்.
தொடர்ந்து, சாலையின் நடுவே ஜே.சி.பி இயந்திரம் மூலம் பள்ளம் தோண்டப்பட்டு வெள்ள நீரை அப்புறப்படுத்தினர். இதனால் சில மணி நேரங்களுக்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதையும் படிங்க: 'கோவையைத் தலைமையிடமாகக் கொண்டு புதிய பொதுப்பணித் துறை மண்டலம்'