திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அடுத்த அக்ராகரம் வேடி வட்டத்தைச் சேர்ந்தவர் ஆட்டோ ஓட்டுநர் ஆறுமுகம் (40). இவர் நேற்று முன்தினம் (அக். 19) அக்ராகரம் பெருமாள் கோயில் அடிவாரத்திலுள்ள குளத்தில் விழுந்து விட்டதாகக் கூறி சுமார் ஆறு மணி நேரம் கடும் போராட்டத்திற்குப் பிறகு, தீயணைப்புத் துறையினர் ஆறுமுகத்தை சடலமாக மீட்டனர்.
அதன்பின் நாட்றம்பள்ளி காவல் துறையினர் உடலைக் கைப்பற்றி திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு உடற் கூறாய்வுக்காக அனுப்பிவைத்திருந்தனர். அவரது உடலை, நேற்று (அக். 20) உடற்கூறாய்வு முடித்த பின் அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
இந்நிலையில் ஆறுமுகத்தின் இறப்பில் மர்மம் இருப்பதாகக் கூறி அவரது உறவினர்கள் புதுப்பேட்டை பகுதியில் திருப்பத்தூர் - நாட்றம்பள்ளி செல்லும் சாலையில் ஆறுமுகத்தின் உடலை சாலையில் வைத்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து, தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த நாட்றம்பள்ளி காவல் துறையினர் மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது உறவினர்கள் ஆறுமுகம் இறப்பில் மர்மம் இருப்பதாகவும், அவரை அவரது சக நண்பர்கள் அடித்துதான் கொன்றுள்ளனர் எனவும் கூறி, வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
மேலும் ஆறுமுகம் இறப்பில் சந்தேகத்துக்குரிய நபர்களைக் கைதுசெய்யும் வரை, சாலை மறியலைக் கைவிட மாட்டோம் எனக்கூறி, தொடர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
அதனைத்தொடர்ந்து, காவலர்கள் உங்கள் கோரிக்கை மீது உரிய நடவடிக்கை எடுத்து சம்பந்தப்பட்ட நபர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுப்போம் என உறுதி அளித்தனர். இதையடுத்து ஆறுமுகத்தின் உடலை எடுத்துக் கொண்டு சாலை மறியலைக் கைவிட்டு அங்கிருந்து உறவினர்கள் கலைந்துசென்றனர்.
அதன்பின், ஆறுமுகத்தின் உடல் அடக்கம் செய்யப்பட்டது. மேலும், இச்சம்பவம் தொடர்பாக நாட்றம்பள்ளி காவலர்கள் ஆட்டோ ஓட்டுநர்கள் நான்கு பேரிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.