திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அடுத்த புத்தகரம் கிராமத்தில் இந்து ஆதிதிராவிடர் சமூகத்தைச் சார்ந்த 150-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்துவருகின்றன. இவர்களுக்கு அரசு மூலமாக இலவச வீட்டுமனை வழங்கும் திட்டத்தின்கீழ் வறுமைக் கோட்டிற்கு கீழே உள்ள 45 குடும்பங்களுக்கு இலவச வீட்டுமனைப் பட்டாக்கள் வழங்க ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அரசு வழங்கிய இலவச வீட்டுமனைப் பட்டாவில் முறைகேடு உள்ளது என திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அமர்குஷ்வாஹாவிடம் அப்பகுதியைச் சேர்ந்த கிராம மக்கள் மனு அளித்தனர்.
அந்த மனுவில், "அரசு வழங்கிய இலவச வீட்டுமனைப் பட்டாவை ஊரில் உள்ள ஊர் நாட்டமை ராகராஜ், அரசு ஆசிரியர் சாம்ராஜ், கிருஷ்ணன், நரசிம்மன் ஆகியோர் ஒன்றிணைந்து ஊரிலுள்ள முக்கியஸ்தர்களுக்கு வீட்டுமனைப் பட்டா ஒதுக்கியுள்ளனர்.
எனவே அலுவலர்கள் இப்பகுதிக்கு வந்து வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள மக்களுக்கு இலவச வீட்டுமனைப் பட்டா வழங்க வேண்டும். அதேபோல் மேலே குறிப்பிட்ட நான்கு பேரும் நாங்கள் உங்கள் பெயரைக் குறிப்பிட்டால் மட்டுமே வீட்டுமனைப் பட்டா வரும் எனக் கூறி சுமார் 30 ஆயிரம் வரை கையூட்டாகப் பெற்று துறை சார்ந்த அலுவலர்களிடம் கொடுத்து வீட்டுமனைப் பட்டா பெறப்படுகிறது" எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த மனு மீது நடவடிக்கை எடுத்து உரிய நபர்களுக்கு பட்டா வழங்க வேண்டும் எனவும், தவறு செய்யும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் தெரிவித்திருந்தனர்.