திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் அடுத்த கொத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் சினேகா. இவர் தனது கணவர் மற்றும் அவரது குடும்பத்தாருடன் கொத்தூர் பகுதியில் வசித்து வருகிறார். இவர்களுக்கு சொந்தமாக மாச்சம்பட்டு காப்புக்காட்டுப்பகுதி அடிவாரத்தில் இரண்டு ஏக்கருக்கும் மேலாக விவசாய நிலம் உள்ளது. அதில் தற்போது நெற்பயிர்கள், மாங்காய், வாழைமரம் ஆகியவற்றைப் பயிரிட்டுள்ளனர்.
இந்நிலையில் அறுவடைக்குத் தயாராக உள்ள நெற்பயிர்களையும் வாழை மரங்களையும் மாச்சம்பட்டு, அரங்கல் துருகம் காப்புக்காட்டு பகுதியிலிருந்து வரும் ஒற்றைக் காட்டு யானை கடந்த ஒரு வார காலமாக சேதப்படுத்தி வருகிறது.
இந்நிலையில், இதுகுறித்து வனத்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டும் இதுவரை யானையை விரட்ட உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லையென்றும், இனி ஒற்றைக் காட்டு யானை விளைநிலங்களுக்கு வராமல் இருக்க தகுந்த ஏற்பாடுகள் செய்தும், சேதமடைந்த நெற்பயிர், வாழைகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் சினேகாவும், அப்பகுதி விவசாயிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்.