திருப்பத்தூர்: திருப்பத்தூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் இன்று (நவ. 26) திருவண்ணாமலையில் நடைபெறும் கார்த்திகை தீபத் திருவிழாவை காண திருப்பத்தூர் பேருந்து நிலையத்தில் குவிந்தனர்.
இந்நிலையில், பயணிகள் சிரமமின்றி பயணம் செய்ய கூடுதலாக, தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக விழுப்புரம் மண்டல பணிமனையில் இருந்து 50க்கும் மேற்பட்ட சிறப்பு பேருந்துகளும், சேலம் கோட்டத்தில் இருந்து 30 சிறப்பு பேருந்துகளும் இயக்கத்தில் இருப்பதாகவும், கூட்டம் அதிகரிப்பதன் காரணமாக சென்னை, வேலூர், சேலம், தருமபுரி மற்றும் கிராமப்புற உள்ளிட்ட வழித்தடங்களில் இயக்கப்படும் சில பேருந்துகளை திருவண்ணாமலைக்கு இயக்கப்பட்டு வருவதாகவும் அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.
இதனால் வெளியூர் மற்றும் உள்ளூர் செல்லும் பொதுமக்கள் பேருந்துகள் இல்லாததால் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். பேருந்து பற்றாக்குறையின் காரணமாக, ஆயிரக்கணக்கான மக்கள் கூட்டம் கூட்டமாக திருப்பத்தூர் பேருந்து நிலையத்தில் அலை மோதுகின்றனர்.
மேலும், காலியாக வருகின்ற பேருந்துகள் பேருந்து நிலையத்திற்குள் வருவதற்கு முன்பாகவே பயணிகள் வழியில் இடை மறித்து ஏறி இடம் பிடிக்கின்றனர். இதற்கிடையில் திருப்பத்தூர் பேருந்து நிலையத்திற்கு அருகில் இருக்கும் அரசு போக்குவரத்துக் கழகப் பணிமனைக்கு பயணிகள் கூட்டம் கூட்டமாகச் சென்று அங்கிருந்து பேருந்தில் ஏறி இடம் பிடித்து வருகின்றனர்.
இதனால் அரசு போக்குவரத்துக் கழகப் பணிமனை பேருந்து நிலையமாகவே மாறியது. கழகப் பணிமனையில் உள்ள போக்குவரத்து துறையைச் சேர்ந்த அரசு அதிகாரிகளிடம் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் திருவண்ணாமலைக்கு கூடுதல் பேருந்துகளை இயக்க கோரிக்கை வைத்துள்ளனர்.
முன்னதாக, அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் பயணிகளின் வசதிக்காக திருவண்ணாமலை தீப திருநாள் மற்றும் பௌர்ணமியை முன்னிட்டு சென்னை மற்றும் தமிழ்நாட்டின் பிற முக்கிய நகரங்களிலிருந்தும் அண்டை மாநிலங்களான பெங்களூரு, புதுச்சேரி ஆகிய இடங்களில் இருந்து 2,700 சிறப்பு பேருந்துகள் மூலம் 6,947 நடைகள் பக்தர்கள் வசதிக்காக இயக்கப்பட உள்ளதாக போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் அறிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: "4 ஆண்டுகளுக்கு ஒரு முறை வாய்ப்பு... 100% உழைப்பையும் போடுவேன்.. பயிற்சிக்காக வெளிநாடு செல்கிறேன்" - நீரஜ் சோப்ரா!