திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த மக்கள் நேற்று (ஏப்ரல்.06) தேர்தலில் வாக்களிப்பதற்காகக சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, ஓசூர், பெங்களூர் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து சொந்த ஊருக்குத் திரும்பினர். இவர்கள் வாக்களித்து விட்டு மீண்டும் தங்கள் பணியிடங்களுக்கு செல்ல மதியம் முதல் காத்திருந்தனர்.
ஆனால் அங்கு போதிய பேருந்துகள் இயக்கப்படாததால், ஆம்பூர் அறிஞர் அண்ணா பேருந்து நிலையத்தில் 300க்கும் மேற்ப்பட்ட பயணிகள் கூடினர். இதனால் சென்னை - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால் அங்கு காவலர்கள் குவிக்கப்பட்டனர். மேலும், இதையறிந்த அப்பகுதி அரசியல் தலைவர்கள் அங்கு வந்து விசாரணை நடத்தினர். அப்போது முறையாக பேருந்துகள் இயக்கப்படவில்லை என அவர்களிடம் கூறியதால் ஆத்திரமடைந்த அரசியல் தலைவர்கள் தங்களை தகாத வார்த்தைகளில் திட்டியதாக மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
மேலும் அவர்கள் கூறுகையில், "பிற்பகல் மூன்று மணியில் இருந்து பேருந்துகள் சரிவர வரவில்லை. இயக்கப்படும் பேருந்துகளிலும் பயணிகள் கூட்டம் அலைமோதுகிறது" என்றனர்.
பின்னர் காவல் துறையினர் போக்குவரத்தை சரிசெய்து, பயணிகள் அவர்கள் செல்ல வேண்டிய பகுதிகளுக்கு தனியார் வேன்களை ஏற்பாடு செய்தனர்.