ஆம்பூர் சட்டப்பேரவை உறுப்பினர் வில்வநாதன் ஜூன் 30ஆம் தேதி பொன்னப்பல்லி கிராமத்தில் உள்ள தடுப்பணையை பார்வையிட்டார். அந்த நிகழ்வில் அரங்கல் துருகம் ஊராட்சி செயலாளர் சங்கர் என்பவர் வில்வநாதனின் காலணியை கையில் எடுத்துச்செல்லும் காணொலி ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவியது. அதையடுத்து அந்தக் காணொலியால் சர்ச்சை கிளம்பியது.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் விளக்கமளித்த வில்வநாதன், "தடுப்பணையை நான் பார்வையிட சென்றபோது மழை பெய்திருந்த காரணத்தால் அங்கு சேறும் சகதியும் நிறைந்திருந்தது. அதனால் நான் காலணியை கரையிலேயே கழட்டிவிட்டுச் சென்றேன். அதனை அரங்கல் துருகம் ஊராட்சி செயலாளரும் எனது நண்பருமான சங்கர் எனக்கு தெரியாமல் கையில் எடுத்துவந்துள்ளார்.
அதன்பின்னர் அவர் கையில் எனது காலணியிருப்பதைக் கண்டவுடன் உடனடியாக அதை கீழே போடும்படி அவரிடம் கூறினேன். மற்றபடி நான் காலணியை எடுத்துவரும்படி கூறவில்லை" என்றார்.
மேலும் அவர், "சாதி அடிப்படையில் நான் அவ்வாறு செய்ததாக சமூக வலைதளங்களில் பொய்யான தகவல் பரப்பப்படுகிறது. அது மிகவும் வருத்தம் அளிக்கிறது" என தெரிவித்தார்.
அதையடுத்து அரங்கல் துருகம் ஊராட்சி செயலாளர் சங்கர் கூறுகையில், சட்டப்பேரவை உறுப்பினர் வில்வநாதன் தடுப்பணையை பார்வையிட முன்னே சென்றார். அதையடுத்து அங்கு சென்ற நான் அவரது காலணியை கவனித்து, அதனை மரியாதை நிமித்தமாக அவரிடம் கொடுக்க எடுத்துச்சென்றேன். அதை அவர் பார்த்தபின் கீழே போடும்படி சொன்னார்" என்றார்.
மேலும் அவர் "இச்சம்பவம் குறித்து பொய்யான செய்தி பரப்புபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும்படி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகாரளித்துள்ளேன்" என தெரிவித்தார்.
இதையும் படிங்க: திமுக எம்எல்ஏ-வின் செருப்பை சுமந்த ஊராட்சி செயலாளர்