திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஜூலை 1ஆம் தேதி கனமழை பெய்தது. இதனால், கிராமங்களில் உள்ள ஏரிகள், குட்டைகள் காட்டாறுகளில் தண்ணீர் ஓரளவிற்கு இருந்தது.
இந்நிலையில், அரங்கல்துருகம் ஊராட்சியில் உள்ள பொன்னப்பள்ளி ஏரிக்கரையை ஆம்பூர் திமுக சட்டப்பேரவை உறுப்பினர் வில்வநாதன் பார்வையிட வந்தார்.
அப்போது அவருடன் வந்த வெங்கடசமுத்திரம் திமுக ஊராட்சி செயலாளர் சங்கரிடம், தனது செருப்பை கழற்றி கொடுத்துள்ளார். இதையடுத்து அவரது செருப்பை சங்கர் கையில் எடுத்துக்கொண்டு, எம்எல்ஏ வில்வநாதன் பின்னாலேயே அவர் நடந்து சென்றார்.
அப்போது எடுக்கப்பட்ட வீடியோ சமூகவலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், சமத்துவம், சமூகநீதி என்று பேசும் திமுகவில் இப்படி ஒரு சம்பவம் நடந்திருப்பதை பல்வேறு தரப்பினரை முகம் சுளிக்க வைத்திருக்கிறது.
இதையும் படிங்க: ஸ்மார்ட் சிட்டி திட்டங்களில் முறைகேடு: சிபிஐ விசாரணை கோரும் திமுக!