திருப்பத்தூர்: ஜோலார்பேட்டை அடுத்த ஜெய்பீம் நகரை சேர்ந்த சமூக ஆர்வலரும் ஏபிஜே அப்துல் கலாம் இயற்கை மீட்பு குழு ஒருங்கிணைப்பாளருமானவர் ராஜா (43). இவர் அதே பகுதியில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை தன்னுடைய சொந்த செலவில் வைத்துள்ளார்.
அது மட்டுமின்றி ராஜா, திருப்பத்தூர் மாவட்டம் முழுவதும் சுமார் 7 ஆயிரம் மரக் கன்றுகளும் இயற்கை மீட்பு அறக்கட்டளை சார்பாக சுமார் 14 ஆயிரம் மரக் கன்றுகளும் வைத்துள்ளதாக தெரிவிக்கிறார்.
இந்நிலையில் ஜோலார்பேட்டை ஊராட்சி ஒன்றிய ஊரக வளர்ச்சி துறை சார்பாக மகாத்மா ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ் ஜெய்பீம் நகரில் குறுங்காடு அமைத்துள்ளதாகவும் அதற்காக சுமார் 3லட்சத்து 5ஆயிரத்து 900 ரூபாய் செலவு செய்துள்ளதாகவும் திடீரென பெயர் பலகை வைக்கப்பட்டுள்ளது.
இதனால் ஆதங்கமடைந்த ராஜா இது குறித்து ஊராட்சி நிர்வாக செயலாளர் பெருமாளிடம் கேட்கையில் 100 நாள் வேலை செய்யும் பெண்மணிகளை வைத்து குழி பறித்தலுக்கான தொகை எனத் தெரிவித்துள்ளார். ஆனால் சுமார் 130 குழிகள் மட்டுமே ஊராட்சி நிர்வாகத்தின் சார்பில் தோண்டப்பட்டது என ராஜா ஆதங்கம் தெரிவித்தார்.
இந்த முறைகேடு குறித்து உடனடியாக மாவட்ட நிர்வாகம் செவிசாய்த்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளார்.
இதையும் படிங்க: தேர்தல் தோல்வியால் ஆத்திரமடைந்த அதிமுக பிரமுகர் - கத்திக்குத்தில் திமுக பிரமுகர் மரணம்!