திருப்பத்தூர்: ஆம்பூர் அடுத்த சின்னமலையாம்பட்டுவைச் சேர்ந்தவர் சீனிவாசலு. இவர் கடந்த 20 வருடங்களுக்கு முன்பு, ஆம்பூரில் இயங்கி வந்த தனியார் தோல் தொழிற்சாலையில் மெக்கானிக்காக வேலை பார்த்து வந்துள்ளார். அப்போது, அவருடைய குடும்ப சூழ்நிலை காரணமாக வீட்டை விட்டு வெளியேறி உள்ளார்.
இதனையடுத்து சீனிவாசலு பல ஆண்டுகளாக வீடு திரும்பாத நிலையில், அவரது குடும்பத்தினர் சீனிவாசலு ஆம்பூர் சான்றோர் குப்பம் பகுதியில் உள்ள தங்களது உறவினர் வீட்டில் தங்கி இறந்து விட்டதாகக் கூறி ஆம்பூர் நகராட்சியில் சீனிவாசலுவின் இறப்பு சான்றிதழை வாங்கி உள்ளனர்.
இதனைத் தொடர்ந்து, கடந்த 2022ஆம் ஆண்டு ஏப்ரல் 28ஆம் தேதி சீனிவாசலு சின்னமலையாம்பட்டு பகுதிக்கு வந்துள்ளார். இந்த நிலையில், சில நாட்களுக்குப் பிறகு சீனிவாசலு இறந்து விட்டதாகச் சான்றிதழ் பெற்றது அவருக்குத் தெரிய வந்துள்ளது. இதன் காரணமாக, தான் உயிருடன் தான் உள்ளேன் என்றும், தனது பெயரில் வழங்கப்பட்டுள்ள இறப்பு சான்றிதழை ரத்து செய்யுமாறு கிராம நிர்வாக அலுவலர் முதல் திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் வரை மனு அளித்துள்ளார்.
இருப்பினும், கடந்த 8 மாதங்களாக அதிகாரிகள் உயிருடன் இருப்பதற்கான சான்றிதழ் ஏதும் அளிக்காமல் தன்னை அலைக்கழிக்க வைப்பதாக சீனிவாசலு குற்றம் சாட்டி உள்ளார். அதேநேரம், அனைத்து அரசு அலுவலங்களிலும் தினமும் காத்திருக்கும் சீனிவாசலுவின் மனு குறித்து மலையாம்பட்டு கிராம நிர்வாக அலுவலரிடம் கேட்டபோது, “மனு மீதான பரிசீலனை செய்யப்பட்டு வருகிறது. விரைவில் அவருக்கு வழங்கப்பட்ட சான்றிதழை ரத்து செய்து விடுவோம்” எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: குருவியாக வந்த எம்பிஏ பட்டதாரி.. கூண்டோடு சிக்கியது எப்படி?