திருப்பத்தூர்: திருப்பத்தூர் அடுத்த புதுப்பேட்டை அம்மனாங்கோயில் பகுதியில், சுமார் 15 வருடங்களாக தனியார் தண்ணீர் கம்பெனி இயங்கி வருகிறது. இதில் 20க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இந்த நிலையில் ஆள் பற்றாக்குறை ஏற்பட்டதால், அந்நிறுவனத்தின் மேலாளர் கோபி மூலம் விளம்பரம் செய்யப்பட்டுள்ளது.
இதையடுத்து வடநாட்டை சேர்ந்த மஞ்சு மற்றும் நிர்மல் என்னும் 2 இளைஞர்கள் கடந்த மாதம் 27ஆம் தேதி வேலை வேண்டும் என்று கூறி கோபிக்கு போன் செய்துள்ளனர். அவர்களை அழைத்த கோபி, ஆதார் அட்டை மற்றும் புகைப்படங்களை தர வேண்டும் என்ற நிபந்தனையுடன் வேலைக்கு அமர்த்தியுள்ளார்.
வேலைக்கு சேர்ந்து பல நாள்களாகியும் இருவரும் ஆதார் அட்டையை கொடுக்காமல் இழுத்தடித்துள்ளனர். இந்த நிலையில், நேற்றிரவு தண்ணீர் கம்பெனியில் இருந்த வாகனம், இதர வாகனங்களில் இருந்த 50 லிட்டர் டீசல், சுமார் 2 லட்சம் ரூபாய் ரொக்கம், 50 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள ஸ்டீல் சாமான்கள், ஒரு சிலிண்டர், எல்இடி டிவி என அனைத்தையும் திருடிக் கொண்டு இருவரும் மாயமாகியுள்ளனர்.
வழக்கம் போல காலை வேலைக்கு சென்ற ஊழியர்கள் நிறுவனம் திறந்து கிடப்பதைப் பார்த்து மேலாளர் கோபிக்கு தகவல் அளித்தனர். இதுகுறித்து கோபி காவல்துறையில் புகார் அளித்தார். வழக்குப்பதிவு செய்த போலீசார், மாயமான வடநாட்டு இளைஞர்களை தேடி வருகின்றனர்.
இதையும் படிங்க: திருக்கோவிலூர் அருகே 17 வயது பள்ளி மாணவன் கொலை