திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த கோவிந்தாபுரம் பகுதியில் நள்ளிரவில் தொடங்கி இரவு முழுவதும் சிலர் சூதாட்டத்தில் ஈடுபட்டு வருவதாக ஆம்பூர் காவல் துணை கண்காணிப்பாளருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, காவல் துணை கண்காணிப்பாளர் சச்சிதானந்தம் உத்தரவின் பேரில் உமராபாத் காவல் ஆய்வாளர் சரவணன் தலைமையில் கோவிந்தாபுரம் முழுவதும் ரோந்து பணி முடுக்கிவிடப்பட்டது.
அப்போது, அப்பகுதியில் தென்னந்தோப்போரம் உள்ள பழனி என்பவருக்குச் சொந்தமான வீட்டில் சூதாட்டம் விளையாடிக் கொண்டிருப்பது கண்டறியப்பட்டது. வீட்டினுள் சென்று காவல்துறையினர் சோதனையிட்டபோது 9 பேர் சூதாட்டத்தில் ஈடுபட்டிருந்தது தெரியவந்தது. அதன் பேரில் செல்வகுமார், ரஃபீக் அகமது, பாலாஜி, ஜீவரத்தினம், ஆசிப், கலையரசன், குப்புசாமி, அரசுப் பள்ளி தலைமை ஆசிரியர் பூவராகவன், பழனி உள்ளிட்ட 9 பேரை உமராபாத் காவலர்கள் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 6 இருசக்கர வாகனங்கள், 10 செல்போன், ரூ. 85 ஆயிரம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டன.
இவர்கள் 9 பேரும் ஆம்பூர் ரெட்டி தோப்பு கிருஷ்ணாபுரம், தேவலாபுரம், சான்றோர்குப்பம், புதுமனை உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்தவர் எனக் கூறப்படுகிறது. மேலும், சூதாட்டத்தில் ஈடுபட்ட 9 பேர் மீதும் உமராபாத் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. அவர்களுக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட பின்னர் திருப்பத்தூர் கிளை சிறையில் அடைக்கப்பட்டனர்.
இதையும் படிங்க: மகளை கொலை செய்து வீட்டினுள் புதைத்த தாய்... 6 வருடங்களுக்குப் பிறகு துலங்கிய துப்பு!