திருப்பத்தூர் மாவட்டம், தாமலேரிமுத்தூர் அடுத்த ஆதிதிராவிடர் காலனி பகுதியைச் சேர்ந்தவர் அருணாச்சலம் (40). கூலி தொழிலாளியான இவர் மூன்று நாட்களுக்கு முன்பு வீட்டிலிருந்து மாயமானார். இந்தநிலையில் இன்று (அக்.16) தனியாருக்குச் சொந்தமான விவசாய கிணற்றில் அருணாச்சலம் சடலமாக கிடப்பதாகத் தகவல் கிடைத்தது.
இதுகுறித்து ஜோலார்பேட்டை காவல் நிலையத்திற்குத் தகவல் அளித்தனர். தகவலறிந்து நீண்ட நேரத்துக்குப் பிறகே சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், தீயணைப்பு துறை அலுவலர்கள் உதவியுடன் சடலத்தை மீட்டு உடற்கூறாய்விற்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மூன்று நாட்களுக்கு முன்னதாக, தனது மனைவி கலையரசியுடன் சண்டையிட்டு அருணாச்சலம் வெளியில் சென்றதாகவும், தினமும் குடித்துவிட்டு குடும்பத்தில் அடிக்கடி ரகளையில் ஈடுபட்டு வந்ததாகவும் கூறப்படுகிறது. சம்பவத்தன்று குடிபோதையில் இருந்ததால் கணவன் மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
அப்போது வெளியில் சென்றவர் வீடு திரும்பாத நிலையில் சடலமாக கிணற்றிலிருந்து மீட்கப்பட்டார் என்பதும், இதுகுறித்து ஜோலார்பேட்டை காவல்துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர்.