திருப்பத்தூரில் இடையப்பட்டி அம்மா மினி கிளினிக் மருத்துவமனையில் ஐந்து வயதுக்கு உள்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து முகாமை வணிகவரித்துறை மற்றும் பத்திரப்பதிவு துறை அமைச்சர் கே .சி வீரமணி தொடங்கிவைத்தார்.
பின்னர் பேசிய அமைச்சர் கே .சி வீரமணி, " திருப்பத்தூரில் அங்கன்வாடி மையங்கள், துணை சுகாதார நிலையங்கள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், தனியார் மருத்துவமனைகள் என மொத்தம் 700 முகாம் மையங்களில் சுமார் 1 லட்சத்து 10 ஆயிரத்திற்க்கும் மேற்பட்ட 5 வயதிற்கு உள்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்படவுள்ளது.
இந்தப் பணியில் கிட்டத்தட்ட 2924 பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். 5 நடமாடும் சொட்டு மருந்து முகாம்கள் சிறப்பு வாகனத்தின் மூலம் வழங்கப்படவுள்ளது.
கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு போலியோ நோயால் குழந்தைகள் பாதிக்கப்பட்டிருந்தனர். பின்னர் அரசு எடுத்த தொடர் நடவடிக்கையாலும், மக்கள் அளித்த ஒத்துழைப்பினாலும் இன்று தமிழ்நாடு போலியோ இல்லாத மாநிலமாக மாறியுள்ளது. மக்கள் அச்சம் இல்லாமல் தங்கள் குழந்தைகளுக்கு போலியோ மருந்து போட்டுக் கொண்டனர்.
அரசுக்கும் மக்களுக்கும் இடையே சரியான ஒத்துழைப்பு இல்லாத காரணத்தினால் தான், வளர்ந்த நாடுகளில் தற்போதும் போலியோவை முற்றிலுமாக ஒழிக்க முடியவில்லை. குழந்தைகள் ஆரோக்கியமாக இருக்க போலியோ சொட்டு மருந்தை போட்டுக்கொள்ள வேண்டும்" எனத் தெரிவித்தார்.