வாணியம்பாடி அடுத்த ஆலங்காயத்தில் 2.65 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்ட ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை கடந்த டிச.7ஆம் தேதியன்று காணொலி காட்சி மூலமாக தமிழ்நாடு முதலமைச்சர் திறந்து வைத்தார்.
இதனை தொடர்ந்து இன்று(டிச.11) பத்திரப்பதிவு துறை அமைச்சர் வீரமணி, தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நிலோபர் கபீல், மாவட்ட ஆட்சியர் சிவனருள், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார் ஆகியோர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஆய்வு மேற்கொண்டு குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்தனர்.
இந்நிகழ்ச்சிக்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்து அமைச்சர் வீரமணி கூறுகையில், 60 ஆண்டுகளுக்கு பிறகு சீரமைக்கபட்ட ஆலங்காய ஊராட்சி ஒன்றிய அலுவலகம் இன்று புதியாக தொடங்கப்பட்டுள்ளது. மேலும் வாணியம்பாடி - திருப்பத்தூர் சாலை அமைக்க 299 கோடி ரூபாய் செலவில் சாலை அமைக்க ஒப்பந்ததாரர்களிடம் ஒப்பந்தம் விடப்பட்டுள்ளது.
இந்நிலையில் இன்னமும் சில வாரங்களில் ஒப்பந்ததாரரை அழைத்து பூமி பூஜை போட்டு சாலை அமைக்கும் பணி தொடங்கப்படவுள்ளது. மேலும் தமிழ்நாட்டில் அதிமுக ஆட்சியில் 11 அரசு மருத்துவக் கல்லூரிகளை முதலமைச்சர் தொடங்கி வைத்துள்ளார். அடுத்த அறிவிப்பாக திருப்பத்தூர் மாவட்டத்தில் அரசு மருத்துவக் கல்லூரியுடன் கூடிய மருத்துவமனையை தொடங்கி வைப்பார்.
மேலும் திருப்பத்தூர் மாவட்டத்தில் நிவர் புயலின் சேதமாக மத்திய அரசிடம் 9.45 கோடி ரூபாய் இழப்பீடு கேட்டு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. என தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியல் வாணியம்பாடி கோட்டாட்சியர் காயத்ரி சுப்பிரமணியம், வாணியம்பாடி வட்டாட்சியர் சிவபிரகாசம் மற்றும் ஊராட்சி ஒன்றிய அலுவர்கள் மற்றும் அரசு துறை அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.