திருப்பத்தூர்: ஆத்தூர் பகுதியில் உள்ள பொதிகை தனியார் கல்லூரியில் தமிழ்நாடு ஊரக மற்றும் நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் (மகளிர் திட்டம்) திருப்பத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் இணைந்து நடத்திய தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் மற்றும் இளைஞர் திறன் திருவிழா நடைபெற்றது.
இதில் 200க்கும் மேற்பட்ட முன்னணி தனியார் துறை நிறுவனங்கள் பங்கேற்றன. மேலும், 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்களுக்கு மாணவ, மாணவிகளை தேர்வு செய்தனர். இந்த முகாமில் அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்திற்கு பதிவு வழிகாட்டுதல்கள் இலவச திறன் மேம்பாட்டு பயிற்சிக்கான பதிவும் நடைபெற்றன.
மேலும், கல்வித் தகுதிகள் 8ஆம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு படித்தவர்கள் மற்றும் ITI டிப்ளமோ, பார்மசி, பொறியியல் படித்தவர்களும் கலந்து கொள்ளும் வண்ணம் இந்த தனியார் வேலை வாய்ப்பு முகாம் இருந்தது. மேலும், இந்த நிகழ்வில் திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் கலந்து கொண்டு, திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள படித்த இளைஞர்கள் மற்றும் பெண்கள் இந்த வேலை வாய்ப்பு முகாமை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொண்டார்.
இதையும் படிங்க: வண்டலூரில் சிறுதானிய விழிப்புணர்வு நிகழ்ச்சி!
அதனைத் தொடர்ந்து பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலை மற்றும் சிறிய துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு கலந்து கொண்டு பேசினார். மேலும், வேலைவாய்ப்பு முகாமில் தேர்வு பெற்ற மாணவ, மாணவிகளுக்கு அமைச்சர் எ.வ.வேலு பணி ஆணை வழங்க முற்படும்போது திடீரென பலத்த மழை பெய்தது. அப்போது கனமழையினையும் பொருட்படுத்தாமல், அமைச்சர் எ.வ.வேலு தேர்வானவர்களுக்கு பணி ஆணை வழங்கினார்.
தொடர்ந்து மழை பெய்த நிலையிலும், அமைச்சருக்கு அவரின் உதவியாளர் குடை பிடிக்க, அதன் பிறகு எம்எல்ஏ தேவராஜிக்கு மற்றொருவர் குடை பிடித்தார். அதன் பிறகு ஒவ்வொருவராக திருப்பத்தூர் எம்எல்ஏ நல்லதம்பி மற்றும் மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் ஆகியோரும் குடைக்குள் இருந்த நிலையில் நிகழ்ச்சி தொடர்ந்து நடந்தது.
மேலும் இந்த நிகழ்ச்சியில் திருவண்ணாமலை நாடாளுமன்ற உறுப்பினர் சி.என்.அண்ணாதுரை, ஆம்பூர் சட்டமன்ற உறுப்பினர் வில்வநாதன், அரசு அதிகாரிகள் மற்றும் திருப்பத்தூர் மாவட்ட திமுக முக்கிய நிர்வாகிகள் என பலர் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க: தோல் கழிவுகளால் பாழாகும் பாலாறு - அதிகாரிகள் வேடிக்கை பார்ப்பதாக விவசாயிகள் வேதனை!