வேலூர்:வேலூர் மாவட்டம் காட்பாடியில் நகர்ப்புற வாழ்வாதார வேலைவாய்ப்பு திட்டத்தை நீர் வளம் மற்றும் கனிமவளத்துறை அமைச்சர் துரைமுருகன் துவங்கி வைத்து மரக் கன்றுகளையும் நட்டு வைத்தார். இதில் வேலூர் மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன், வேலூர் மாநகராட்சி மேயர் சுஜாதா, மாநகராட்சி ஆணையர் அசோக்குமார்.உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்
இவ்விழாவில் அமைச்சர் துரைமுருகன் பேசுகையில், அரசின் சார்பில் ஒதுக்கப்படும் நிதிகள் முறையாகச் செலவிடப்பட வேண்டும். கடந்த ஆட்சியில் ஆயிரம் கோடி ரூபாய் ஸ்மார்ட் சிட்டிக்காக வந்தது, அதனை எங்கே செலவிட்டார்கள்? என்ன செய்தார்கள்?எனத் தெரியவில்லை. இந்த முறைகேடு குறித்து நான் விசாரணை கமிஷன் அமைத்து நடவடிக்கை எடுப்பேன்.
அதிகாரிகள் அமைச்சர் துரைமுருகன் தொகுதியில் தான் பணிபுரிகிறோம் என்ற உணர்வுடன் பணியாற்ற வேண்டும்.சமுதாயக் கூடங்கள் தனி நபர் ஆக்கிரமிப்பில் உள்ளது இந்த ஆக்கிரமிப்பை மாநகராட்சி ஆணையர் ஒரு வாரத்திற்குள் அகற்ற வேண்டும் என்று பேசினார். பின்னர் அவர் அளித்த பேட்டியில், “நீர் நிலை ஆக்கிரமிப்புகள் அகற்றத் தீவிரமாக நடவடிக்கை எடுத்துவருகிறோம். கொணவட்டத்தில் நீர் நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றியுள்ளோம் உச்சநீதிமன்றம் கடுமையாக நடவடிக்கை எடுக்கச் சொல்லியதன் அடிப்படையில் உயர்நீதிமன்ற நீதிபதிதலைமைச் செயலாளரை அழைத்து இதுகுறித்து பேசுகிறார். தமிழ்நாடு முழுவதும் நீர் நிலை ஆக்கிரமிப்பு கணக்கெடுக்கப்பட்டுள்ளது” எனக் கூறினார்.
தொடர்ந்து, “குடியாத்தத்தில் அரசால் வீடு வழங்கப்பட்டவர்கள் கூட நீர் நிலையை ஆக்கிரமித்துள்ளனர். அகரம் ஆற்றில் தடுப்பணை கட்டப்படும் ஆக்கிரமிப்புகளும் அகற்றப்படும்.
கோதாவரி காவிரி இணைப்பு திட்டம் மத்திய அரசின் திட்டம் கர்நாடக எதிர்ப்பு தெரிவித்தால் மத்திய அரசு தான் கர்நாடக அரசுடன் பேச வேண்டும்.
ஆறுகளை இணைப்பதை முதல் முதலாகச் செய்தவன் கரிகால சோழன். தாமிரபரணி- கருமேணி ஆற்றுடன் இணைக்கும் திட்டம், காவிரி- குண்டாறு இணைப்பு திட்டம், பாலாறு- செய்யாறு இணைப்பு ஆகிய திட்டங்கள் செயல்படுத்தப்படும்.
தென்பெண்ணைப் பாலாறு இணைக்க விவசாயிகள் கோருகின்றனர். ஆனால் நிதியில்லை. கனிமவளக் கொள்ளையை கண்டுபிடித்து வண்டிகளைப் பறிமுதல் செய்துள்ளோம். அது குறித்த புள்ளி விவரங்களைச் சட்டப்பேரவையில் கூறுவேன்” என்று கூறினார்.
இதையும் படிங்க:தமிழ்நாட்டில் 394 பேருக்கு கரோனா சிகிச்சை