திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் சான்றோர் குப்பம் வண்ணாத்துரை பகுதியை சேர்ந்த பழனி என்பவரின் மகன் மணிகண்டன் கடந்த 6 மாதங்களுக்கு முன் அவருக்கு சொந்தமான டிராக்டரில் மணல் லோடு ஏற்றி வந்ததாக கூறி நகர காவல் துறையினர் அவரை கைது செய்து டிராக்டரை பறிமுதல் செய்துள்ளனர்.
இந்த நிலையில் பறிமுதல் செய்யப்பட்ட டிராக்டரை விடுவிக்க கோரி வழக்கறிஞர் மூலம் பழனி நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். இந்த மனுவானது நீதிபதி முன் விசாரணைக்கு வரப்பட்டு கடந்த டிசம்பர் 10ஆம் தேதி அன்று ஆம்பூர் நகர காவல் நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டுள்ள டிராக்டரை எடுத்துச்செல்ல நீதிமன்றத்தில் உத்தரவு பெற்று உத்தரவினை மறுநாள் காவல் நிலையத்தில் கொடுத்துள்ளனர். அதைப் பெற்றுக்கொண்ட காவலர்கள், ஆய்வாளரிடம் தெரிவிப்பதாக கூறி இரண்டு மூன்று நாட்கள் அலைக்கழித்ததாக கூறப்படுகிறது.
மேலும் ஆய்வாளர் திருமால் டிராக்டரை விடுவிக்க உத்தரவு அளித்தும் 7 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டு நீதிமன்ற உத்தரவை மதிக்கவில்லை எனக்கூறி நகர காவல் ஆய்வாளர் திருமாலை கண்டித்து ஆம்பூர் வழக்கறிஞர்கள் சங்க இணை செயலாளர் கிருஷ்ணமூர்த்தி தலைமையில் வழக்கறிஞர்கள் நீதிமன்ற பணிகளை புறக்கணித்து நீதிமன்ற வளாகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.