திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் பெத்லகேம் இரண்டாவது வீதியில் வசித்து வருபவர் கோமதி. இவர் கடந்த 26 ஆண்டுகளாக ஓலை வீட்டில் வசித்து வருவதால், இவரிடம் நகராட்சி அலுவலர்கள் யாரும் வரி வசூலுக்குச் சென்றதில்லை என்று கூறப்படுகிறது.
இந்நிலையில் நகராட்சிப் பணியாளர் ஆனந்தன் என்பவர் வரி வசூல் செய்ய, அந்தப் பகுதிக்கு சென்று கோமதியிடம் வரி செலுத்துமாறு கூறியுள்ளார். அந்தப் பெண் தான் ஓலை வீட்டில் வசிப்பதால் வரி வசூல் செலுத்துவதில்லை என்றும், தரை வரி மட்டும் கட்டி வருவதாக அதற்கான நகராட்சி தரப்பில் வழங்கப்பட்ட உரிமையாளர் படிவத்தை எடுத்துக் காண்பிதுள்ளார்.
அதற்கு நகராட்சிப் பணியாளர் ஆனந்தன் அந்த படிவத்தை வாங்கி, கிழித்து அந்தப் பெண்ணின் முகத்தில் வீசிவிட்டு கடுமையான வார்த்தைகளால் பேசியுள்ளார். அந்தப் பெண்ணுக்கு ஆதரவாக பேச வந்தவர்களையும் திட்டியுள்ளார்.
இதனால் மிகவும் மனவேதனையடைந்த அப்பெண் நகராட்சிப் பணியாளர் ஆனந்தன் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ஆம்பூர் நகர காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்தப் புகாரின் பேரில் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: ஸ்டாலின் மீதான அவதூறு வழக்கு - தமிழ்நாடு அரசு பதிலளிக்க உத்தரவு