திருப்பத்தூர்: குறுமன்ஸ் பழங்குடியின மக்கள் சங்கமும், தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கமும் இணைந்து இன்று (நவ. 23) திருப்பத்தூர் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு குருமன்ஸ் பழங்குடி இன மக்களுக்கு சாதிச் சான்றிதழ் வழங்கக் கோரி தர்ணா போரட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், இதில் தாங்கள் உண்மையான குறுமன்ஸ் இனத்தவர்கள் எனக்கூறி தலை மீது தேங்காய் உடைத்துக் காண்பித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பெற்றோர்களுக்கு சாதிச் சான்றிதழ் இருந்து பிள்ளைகளுக்கு இல்லாமலும், சகோதரர்களில் ஒருவருக்கு இனச் சான்றிதழ் இருந்து மற்றொருவருக்கு இல்லாமலும், இந்த குறுமன்ஸ் பழங்குடி இன மக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், குறுமன்ஸ் பழங்குடி இன மக்கள் அனைவருக்கும் சாதிச் சான்றிதழ் வழங்க வேண்டும் உள்ளிட்ட சில கோரிக்கைகளை முன்வைத்து, திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்க தலைவரும் அருள் சட்டமன்ற தொகுதி முன்னாள் எம்.எல்.ஏவுமான டில்லி பாபு தலைமையில் சுமார் 200க்கும் மேற்பட்டோர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதில், மாவட்ட நிர்வாகம் மட்டுமின்றி, அரசுக்கு எதிராகவும் கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன. மேலும், தாங்கள் உண்மையான குறுமன்ஸ் இன பழங்குடி மக்கள் தான் என்பதற்கு சான்றாக சேவையாட்டம் ஆடியும், அருள் கொண்டவர் மீது தேங்காய் உடைத்தும் சாமியை வழிபடும் நிகழ்வை நிகழ்த்திக் காட்டினார்.
இந்த போராட்டத்தில், கடந்த 2014 முதல் 2016 வரை திருப்பத்தூர் மாவட்டத்தில் வழங்கிய குறுமன்ஸ் பழங்குடி சாதிச் சான்றிதழ்களை ரத்து செய்ய, சட்ட விரோத முறையில் வலியுறுத்திய தமிழ்நாடு அரசின் பழங்குடியினர் நலத்துறை செயலாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
மேலும், பெற்றோருக்கு சாதிச் சான்றிதழ் இருந்தால் பிள்ளைகளுக்கும் வழங்க வேண்டும் என்ற சென்னை உயர் நீதிமன்ற தீர்ப்பின்படியும், குறுமன்ஸ் இன மக்களின் கலாச்சாரத்தை அடிப்படையாகக் கொண்டும், குறுமன்ஸ் இன மக்களுக்கு பழங்குடியின சான்றிதழ் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளும் வலியுறுத்தப்பட்டன.
இந்த போராட்டத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க செயலாளர் சாமிநாதன் துவக்க உரையாற்றினார். இதில் பழங்குடி மக்கள் சங்க தலைவர் சிவலிங்கம், பொதுச்செயலாளர் வீரபத்திரன், பொருளாளர் அரங்கநாதன், தாலுகா செயலாளர் காசி மற்றும் நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
இதையும் படிங்க: பாசி நிதி நிறுவன மோசடியில் முன்னாள் ஐ.ஜி. பிரமோத் குமார் நேரில் ஆஜராக உத்தரவு - சிபிஐ நீதிமன்றம்!