திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி சட்டப்பேரவை அலுவலகம் திறப்பு விழா நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக அதிமுக மாவட்டச் செயலாளரும், வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத் துறை முன்னாள் அமைச்சருமான கே.சி. வீரமணி கலந்துகொண்டு அலுவலகத்தைத் திறந்துவைத்தார்.
அதனைத் தொடர்ந்து, தொகுதி முழுவதுமுள்ள தூய்மைப் பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறியதாவது,
"அதிமுக சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட வாணியம்பாடி சட்டப்பேரவை உறுப்பினர் செந்தில்குமார் தன் பணியைத் தொடங்கியுள்ளார் என்பதை உணர்த்தக்கூடிய வகையில் இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
வாணியம்பாடி சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட பொதுமக்கள் சட்டப்பேரவை உறுப்பினர் அலுவலகத்திற்கு வருகைதந்து அல்லது தொடர்புகொண்ட பிரச்சினைகளுக்குத் தீர்வு காணலாம்.
கட்சியிலிருந்து நீக்கப்பட்ட தொழிலாளர் நலத் துறை அமைச்சர் மீண்டும் கட்சியில் சேர தலைமைதான் முடிவு செய்யும்.
அதிமுக தொண்டர்களுடன் பேசுவதாக சசிகலாவின் ஆடியோக்கள் வெளியாகிவருகிறது. அது முழுவதும் பொய்யான செய்தி. கட்சியிலிருந்து நீக்கப்பட்ட சசிகலா மீண்டும் கட்சியில் இணைவதற்கு வாய்ப்பே இல்லை.
முன்னாள் முதலமைச்சர்கள் எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோர் வழியிலேயே எடப்பாடி பழனி்சாமி, ஓபிஎஸ் ஆகியோர் தலைமையில் நடக்கக்கூடிய அண்ணா திமுக வின் தலைமையில் என்ன கட்டளை எடுக்கிறார்களோ அதற்குக் கட்டுப்படக் கூடியதுதான் வேலூர் ஒருங்கிணைந்த மாவட்டத்தின் நிலைப்பாடு" எனத் தெரிவித்தார்.
மேலும் பேசிய அவர், "சட்டத் துறை முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகத்திற்குக் கொலை மிரட்டல் விடப்பட்டுள்ளது. பலமுறை இது போன்று கொலை மிரட்டல்களை அவர் சந்தித்துள்ளார். அவர் பனங்காட்டு நரி, அவர் இந்த சலசலப்புகள் எல்லாம் அஞ்சிட மாட்டார். அவர் பல எதிர்ப்புகளைத் தாண்டிதான் அரசியல் பயணம் மேற்கொண்டுவருகிறார்" என்றார்.