திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே பத்தாப்பேட்டை பகுதி பாலாற்று கரையோரம் சாந்தராஜ் என்பவருக்கு சொந்தமான விவசாய நிலம் உள்ளது. அதில் அவர் வாழை, நெல் உள்ளிட்டவைகளை பயிரியிட்டுள்ளார். இந்தப் பயிர்களை சாந்தராஜ் தினந்தோறும் பார்வையிடுவது வழக்கம்.
அந்தவகையில், இன்று காலை வழக்கம் போல் வாழைத்தோப்பை பார்வையிட்டுக் கொண்டிருந்தபோது, சுமார் 25 அடி தொலைவில் சிறுத்தை ஒன்று படுத்திருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.
பின்னர், இதுகுறித்து அவர் காவல் மற்றும் வனத்துறையினருக்கு தகவலளித்தார். ஊருக்குள் சிறுத்தை நடமாட்டம் இருக்கும் தகவல் கிராமத்தில் பரவியதால் மக்கள் பீதி அடைந்துள்ளனர்.
இதே போல் கடந்த ஐந்து நாள்களுக்கு முன்பு சென்னாம்பேட்டை பகுதியில் தனியாருக்கு சொந்தமான தென்னந்தோப்பில் உள்ள புதர் ஒன்றில் சிறுத்தை ஒன்று பதுங்கியிருந்ததை அங்கு பணிபுரியும் பெண்கள் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
இதற்கிடையில், மீண்டும் ஊருக்குள் சிறுத்தை புகுந்ததால் அதனை வனத்துறையினர் கூண்டு வைத்து பிடித்து அருகில் உள்ள காப்புகாட்டு பகுதியில் விடவேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளனர். இதனால் இந்தப் பகுதியில் வன மற்றும் காவல்துறையினர் முகாமிட்டு சிறுத்தையை பிடிக்கும் முனைப்பில் உள்ளனர்.