இன்று முதல் 50 விழுக்காடு ஊழியர்களுடன் அரசு அலுவலகங்கள் செயல்படலாம் என அரசு அறிவித்திருந்த நிலையல், திருப்பத்தூர் மாவட்டத்திலுள்ள அரசு அலுவலகங்களில் பணியாற்றும் அரசு ஊழியர்கள் பணிக்கு வர ஏதுவாக வேலூர், கிருஷ்ணகிரி, தருமபுரி ஆகிய மாவட்டங்களுக்கு தலா ஒரு பேருந்தை இயக்க திருப்பத்தூர் ஆட்சியர் சிவனருள் போக்குவரத்துக் கழகத்திடம் கோரிக்கை வைத்திருந்தார்.
அதன்படி, ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சிறப்பு பேருந்து வேலூர் மாவட்டத்திலிருந்து காலை 7.30 மணியளவில் அரசு ஊழியர்களுடன் திருப்பத்தூர் மாவட்டம் புறப்பட்டுச் சென்றது. தகுந்த இடைவெளியைப் பின்பற்றும் வகையில், ஒரு பேருந்திற்கு 25 நபர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர். எவ்வித சலுகையும் இன்றி சாதாரண கட்டணம் வசூலிக்கப்பட்டது.
25 அரசு ஊழியர்களுடன் திருப்பத்தூர் மாவட்டம் புறப்பட்ட அரசுப் பேருந்து, மாலை 6 மணிக்கு திருப்பத்தூரிலிருந்து வேலூருக்கு இயக்கப்படும். முன்னதாக பேருந்து முழுவதும் கிருமிநாசினி தெளிக்கப்பட்டு, ஓட்டுநர், நடத்துனருக்கு பரிசோதனை செய்யப்பட்டது.
இதுகுறித்து பேசிய திருப்பத்தூர் ஆட்சியர் சிவனருள், "வெளி மாவட்டங்களிலிருந்து வரும் ஊழியர்களுக்கு அரசு அலுவலகங்களிலேயே காய்ச்சல் பரிசோதனை மேற்கொள்ளப்படும். நோய்த் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கட்டாயம் கடைபிடிக்கவும் அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
வரும்காலங்களில் பணியாளர்களின் பயன்பாடு அதிகம் தேவைப்பட்டால் தேவைக்கு ஏற்ப பேருந்தை இயக்க நடவடிக்கை எடுக்கப்படும்" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: தஞ்சாவூரில் அரசு அறிவிப்பின்படி பேருந்துகள் இயக்கம்