திருப்பத்தூர் அடுத்த அரசு பட்டுப்பூச்சி அலுவலகம் அருகே ஓசூரிலிருந்து வந்த அரசுப் பேருந்தும் திருப்பத்தூரிலிருந்து கிருஷ்ணகிரி நோக்கி பில் ஏற்றிச் சென்ற லாரியும் நேருக்கு நேர் மோதிக்கொண்டு விபத்துக்குள்ளானது.
திருப்பத்தூர் தருமபுரி மண்டலத்திற்குள்பட்ட அன்னை சத்யா அரசுப் பேருந்தின் ஓட்டுநர் குரும்பேரி பகுதியைச் சேர்ந்த மாணிக்கம் மகன் சரவணன் (50), தாதம்பட்டி பகுதியைச் சேர்ந்த ராஜப்பன் மகன் அருணாச்சலம் (54) பேருந்தின் நடத்துநர் இருவரும் ஓசூரிலிருந்து சுமார் 80 பயணிகளை ஏற்றிக்கொண்டு புறப்பட்டனர்.
அப்பொழுது திருப்பத்தூர் அருகே உள்ள அரசு பட்டுப்பூச்சி அலுவலகம் எதிரில் வந்தபொழுது எதிரே சென்றுகொண்டிருந்த டிராவல்ஸ் வாகனம் திடீரென வேகத்தைக் குறைத்து நிற்பதற்கு முயன்றதாகத் தெரிகிறது.
இதனால் பதற்றமடைந்த பேருந்தின் ஓட்டுநர் சரவணன் டிராவல்ஸ் மீது மோதிவிடக் கூடாது என்பதற்காகப் பேருந்தை வலதுபக்கமாகத் திரும்பியுள்ளார். அப்போது எதிர்த் திசையில் கும்பகோணம் பகுதியைச் சேர்ந்த சேகர் மகன் அரவிந்த்ராஜ் (24) லாரியில் பில் ஏற்றிக்கொண்டு கிருஷ்ணகிரியை நோக்கி வந்துகொண்டிருந்ததை கவனிக்காமல் விட்டதால் எதிர்பாராதவிதமாக பேருந்தும் லாரியும் நேருக்கு நேர் மோதிக்கொண்டு விபத்துக்குள்ளாகின.
ஆனால் நல்வாய்ப்பாகப் பேருந்தில் பயணித்துக் கொண்டிருந்த சுமார் 80-க்கும் மேற்பட்ட பயணிகள், ஓட்டுநர், நடத்துநர், லாரியின் ஓட்டுநர் அனைவரும் சிறு, சிறு காயங்களுடன் உயிர்ச்சேதம் ஏதுமின்றி தப்பினர்.
சிறு சிறு காயமடைந்த சுமார் 15-க்கும் மேற்பட்ட பயணிகளை 108 ஆம்புலன்ஸில் மீட்கப்பட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பிவைக்கப்பட்டனர். இச்சம்பவம் அறிந்து விரைந்துவந்த காவல் துறையினர் விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்துவருகின்றனர்.
இதையும் படிங்க: ஈரோட்டில் வெள்ளாடுகளைக் கடித்துக் கொன்ற சிறுத்தை