திருப்பத்தூர் அரசுப்பேருந்து பணிமனையில் இருந்து இன்று (நவ 24) காலை திருமால் (45) என்ற ஓட்டுநர் நாராயணபுரத்திற்கு அரசுப்பேருந்தை எடுத்துச்சென்றுள்ளார். அப்போது நாராயணபுரம் பகுதியில் இருந்து, சுமார் குருசலாபட்டு பகுதியில் உள்ள 50 பள்ளி மாணவர்கள் பேருந்தில் பயணித்துள்ளனர்.
இந்த நிலையில் நாராயணபுரத்தில் இருந்து சுமார் ஒரு கிலோ மீட்டர் தொலைவில் பேருந்து வந்து கொண்டிருந்தபோது, சாலையில் உள்ள மழை ஈரத்தின் காரணமாக பேருந்து ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்தது. தொடர்ந்து அருகில் உள்ள மரத்தில் மோதி சாய்ந்த பேருந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த பொதுமக்கள் உடனடியாக சென்று மாணவர்களை மீட்டனர். மேலும் விபத்தில் சிக்கிய பல மாணவர்கள் சிறு காயங்களுடன் உயிர் தப்பினர். அதேநேரம் பலத்த காயமடைந்த ஏழு பேர் திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர்.
இதனைத்தொடர்ந்து அப்பகுதி மக்கள், நாராயணபுரத்தில் இருந்து தடுப்புச்சுவர் அமைக்க பலமுறை கோரிக்கை வைத்தும் நடவடிக்கை எடுக்காததால்தான் இந்த விபத்து நேரிட்டது என்று கூறி, நாராயணபுரத்தில் இருந்து திருப்பத்தூர் செல்லும் சாலையில் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.
பின்னர் இச்சம்பவம் அறிந்து வந்த குருசலாப்பட்டு காவல் ஆய்வாளர் சுரேஷ் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியதன் அடிப்படையில் மறியலில் ஈடுபட்ட அனைவரும் கலைந்து சென்றனர்.
இதையும் படிங்க: ஆந்திர விபத்து - பேருந்து காலில் நின்றதால் உயிரிழந்த பெண்