பருவநிலை தட்பவெப்ப மாற்றங்களால் ஏற்படும் வெள்ளம், நிலநடுக்கம், சுனாமி உள்ளிட்ட சீற்றங்களும், செயற்கை இடர்பாடுகளும் நேரும் சமயங்களில் அவற்றால் நிகழும் இழப்புகளை தடுக்க மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து பள்ளி மாணவ, மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தீயணைப்பு துறையினரின் சார்பில், பேரிடர் மேலாண்மை விழிப்புணர்வு ஒத்திகை நிகழ்ச்சி திருப்பத்தூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது.
இந்த விழிப்புணர்வு நிகழ்வில் திருப்பத்தூர் தீயணைப்பு துறை உயர் அலுவலர் கிருஷ்ணன் சிறப்பு விருந்தினராக பங்கு கொண்டார்.
நிகழ்வில், தீ விபத்து ஏற்பட்டால் அதனை அணைப்பது குறித்தும் , மழைக்காலங்களில் ஏரி குளம் குட்டைகளில் உள்ள தண்ணீரில் மனிதர்கள் தவறி விழுந்தால் உயிருடன் மீட்பது குறித்தும் தீயணைப்புத் துறையினர் விளக்கினர்.
மரங்களின் அவசியம் குறித்தும் மரங்களை அழித்தால் அதனால் ஏற்படும் தீமைகள் குறித்தும் வாகன ஓட்டிகள் இரு சக்கர வாகனத்தில் செல்லும்போது தலைக்கவசம் அணிவது குறித்தும் வாகனத்தில் செல்லும்போது செல்ஃபோன் பயன்படுத்தக்கூடாது என்பது குறித்தும் மாணவர்கள் சிறப்பாக நடித்துக்காட்டினர். இந்த நிகழ்ச்சியில், வட்டாட்சியர் ஆனந்த கிருஷ்ணன், அரசு பள்ளி மாணவ-மாணவிகள் 300க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.
இதையும் படிங்க : பேரிடர் மேலாண்மை திறன் மேம்பாட்டு பயிற்சி; 800க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்பு!