கரோனா ஊரடங்கில் தமிழ்நாடு அரசு அறிவித்திருந்த தளர்வை அடுத்து 34 வகையான சிறு, குறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் தமிழ்நாடு முழுவதும் இயங்கத் தொடங்கின. இதன் ஒரு பகுதியாக, திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் நான்கு கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளைத் தவிர, மற்ற பகுதிகளில் வழக்கம்போல் கடைகள் இயங்கத் தொடங்கின.
வாணியம்பாடியில் திடீர் ஆய்வு மேற்கொண்ட நகராட்சி ஆணையர் சிசில் தாமஸ் தகுந்த இடைவெளியைப் பின்பற்றாமல் காய்கறி, பழங்கள் விற்பனை செய்து வந்ததாகக் கூறி தள்ளு வண்டிகளை பறிமுதல் செய்து, அவற்றில் இருந்த பழங்களை சாலையில் வீசியும், தள்ளு வண்டி கடைகளை கீழே தள்ளியும் அடாவடியில் ஈடுபட்டார்.
அந்த காணொலி சமூக வலைத்தளங்களில் வைரலாகியதை அடுத்து நகராட்சி ஆணையர் சிசில் தாமஸின் இந்த அடாவடித்தனமான செயலுக்கு திமுக மகளிர் அணித் தலைவரும், மக்களவை உறுப்பினருமான கனிமொழி உள்ளிட்ட பல்வேறு அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்தனர். இதனையடுத்து, நகராட்சி ஆணையர் சிசில் தாமஸை காத்திருப்போர் பட்டியலில் வைக்க திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டிருந்தார்.
இந்நிலையில், பாதிக்கப்பட்ட பெண்கள், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு, வாணியம்பாடியில் உள்ள 18 தொழில் சங்கங்களின் பேரமைப்பினர் சார்பில் சிசில் தாமஸை மீண்டும் வாணியம்பாடி நகராட்சி ஆணையராக பணி அமர்த்த வேண்டும் என திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் சிவனருளிடம் கோரிக்கை மனு அளித்துள்ளனர்.
அந்த மனுவில், “வாணியம்பாடி நகர பகுதிகளில் தற்போது வரை 5 நபர்கள் மட்டுமே கரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்கு முழு காரணம் வாணியம்பாடி நகராட்சி ஆணையரின் தீவிர விடாமுயற்சி மற்றும் அவரின் கடின உழைப்பால் மட்டுமே சாத்தியமானது. எனவே, நகராட்சி ஆணையர் சிசில் தாமஸ் மீதான நடவடிக்கையை மறுபரிசீலனை செய்து அவரை மீண்டும் பணியில் அமர்த்த வேண்டும்”என கோரப்பட்டிருந்தது.
இது தொடர்பாக பாதிக்கப்பட்ட பழக்கடை பெண்கள் கூறுகையில், “நகராட்சி ஆணையரின் செயல்பாடு எங்களுக்கு சிறுதளவும் வருத்தம் இல்லை. அவர் செய்தது பொதுமக்களின் நலனுக்காகவே இச்சம்பவத்திற்கு எங்களின் தவறும் முக்கிய காரணமாக உள்ளது. ஆகவே, தமிழ்நாடு அரசு வாணியம்பாடி நகராட்சி ஆணையராக மீண்டும் சிசில் தாமஸை பணியில் அமர்த்த வேண்டும்” என கூறினர்.
முன்னதாக, தனது நடவடிக்கையால் பாதிக்கப்பட்ட தள்ளுவண்டி கடைகள் உரிமையாளர்களிடம் நேரில் சென்று நகராட்சி ஆணையர் சிசில் தாமஸ் வருத்தம் தெரிவித்தது கவனிக்கத்தக்கது.
இதையும் படிங்க : 'மக்களுக்கு அரசால் செய்ய முடியாத உதவிகளை திமுக செய்கிறது' - கீதா ஜீவன்