திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டத்தில் கேட்ட சரக்கு கிடைக்கவில்லை என்பதற்காக டாஸ்மாக் ஊழியரின் மண்டை உடைக்கப்பட்ட சம்பவம் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி ஒன்றியத்துக்கு உள்பட்ட விஷமங்கலம் பகுதியில் உள்ள நாகராசன் பட்டி டாஸ்மார்க் கடை எண் 11303இல் சேல்ஸ் மேனாக பணிபுரிபவர் பழனி. இவர் குரும்பேரி பகுதியை அடுத்த கலரபதி பகுதியை சேர்ந்தவர்.
இந்நிலையில், டாஸ்மாக் கடைக்கு மது வாங்குவதற்காக வந்த நபர்கள் ஒரு குறிப்பிட்ட பிராண்ட் ரம் இருக்கிறதா என்று கேட்டுள்ளார்கள்.
அப்போது அந்தப் பிராண்ட் ரம் இல்லை என்று பழனி கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த மது பிரியர்கள், டேய்... அந்த பிராண்ட் இல்லையென்றால், எதற்கு கடை வைத்திருக்கிறாய் என்று கெட்ட வார்த்தைகள் திட்டியுள்ளனர். இந்நிலையில் மது வாங்க வந்த மற்றொரு நபர், சம்பந்தப்பட்டவர்களை சமாதானம் செய்யும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.
இதில் சமாதானம் ஆகாத அந்நபர்கள், சமாதானம் பேசிய நபரிடமே வம்பிழுத்துள்ளனர். இதனால், அதிர்ச்சி அடைந்த பழனி, கடைக்குள் இருந்து வெளியே வந்து சமாதானம் செய்துள்ளார். அப்போது அருகில் கிடந்த கட்டையை எடுத்து குறிப்பிட்ட பிராண்ட் ரம் கேட்டவர்கள் பழனியின் தலையில் ஓங்கி அடித்ததாக தெரிகிறது. இதில் பழனி பலத்த காயமுற்றார்.
இந்நிலையில், மதுபிரியர்கள் அங்கிருந்து தப்பித்துச்சென்றுவிட்டனர். அவர்களின் இருசக்கர வாகனம் திருப்பத்தூர் கிராமிய காவல் ஆய்வாளர் சிரஞ்சீவியிடம் சிக்கியது. அதனை கைப்பற்றி காவலர்கள் விசாரணையை தொடர்ந்துவருகின்றனர்.
இதையும் படிங்க: செங்கல்பட்டில் டாஸ்மாக் ஊழியரைத் தாக்கி 7 லட்சம் ரூபாய் கொள்ளை!