திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை ரயில்வே நிலையம் அருகில் நான்கு சட்டப்பேரவை வேட்பாளர்களான நல்லதம்பி, தேவராஜ், நரிமுகம்மதுநைம், வில்வநாதன் ஆகியோரை ஆதரித்து திமுக தலைவர் ஸ்டாலின் தீவிரப் பரப்புரையில் ஈடுபட்டார்.
அப்போது அவர் பொதுமக்களிடம் பேசுகையில், “அந்தக் காலத்தில் வாணிகம் பாடியாக இருந்த வாணியம்பாடி, பிரியாணிக்குப் பெயர்போன ஆம்பூர், ஆங்கிலேயர் ஆட்சியில் முதல் முறையாக வரி வசூல் தொடங்கிய திருப்பத்தூர், இப்படிப்பட்ட சிறப்புக்குரிய தொகுதிகளின் வேட்பாளர்களை அறிமுகம் செய்வதற்காக நான் இங்கு வந்துள்ளேன்.
இந்த அதிமுக அமைச்சரவையில் மூன்று மணிகள் உள்ளனர்; அருமையான மணிகள்; வேலுமணி, தங்கமணி, வீரமணி. வேலுமணி அப்பட்டமாக ஊழல் செய்யக்கூடியவர், தங்கமணி அமைதியாக ஊழல் செய்யக்கூடியவர், வீரமணி எப்படி செய்வார் என்று உங்களுக்கே தெரியும். ஏனென்றால் இந்த அனைத்துப் பெயர்களிலும் மணி (Money - பணம்) இருக்கிறது. அதனால் 'மணி'யில்தான் குறிக்கோளாக இருப்பார்கள்.
கமிஷன், கலெக்ஷன், கரெப்ஷன் அதான் அவர்களது கொள்கை. தனது அமைச்சர் பதவியைப் பயன்படுத்தி, இந்தப் பகுதியில் இருக்கக்கூடிய மக்களுக்கு எதுவும் செய்யவில்லை.
நான் முதலமைச்சரானால் தமிழ்நாட்டு மக்களுக்குப் பல நன்மைகளைச் செய்வேன். வேளாண் பயிர்க்கடன் 12 ஆயிரம் கோடியில் தமிழ்நாடு அரசு தற்போது ஐந்தாயிரம் கோடியை மட்டும்தான் தள்ளுபடிசெய்துள்ளது. மீதமுள்ள ஏழாயிரம் கோடியை தள்ளுபடி செய்வேன்.
கூட்டுறவு வங்கியில் வைக்கப்பட்ட ஐந்து பவுனுக்குள்பட்ட நகைக்கடன் தள்ளுபடி, பெண்களுக்கான உரிமைத் தொகை ரூ.1000, பெண்களுக்கு உள்ளூர் பேருந்துகளில் இலவசப் பயணம், 40 விழுக்காடு வேலைவாய்ப்பு, கருவுற்றப் பெண்களுக்கு வீடு தேடி மருத்துவம், கூட்டுறவு வங்கியில் பெற்ற மகளிர் சுய உதவிக் குழு கடன் தள்ளுபடி” எனக் கூறினார்.