திருப்பத்தூர்: நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் பிப்ரவரி 19ஆம் தேதி நடைபெறுகிறது. இதையொட்டி வேட்பாளர்கள் தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த நிலையில் இன்று (பிப்ரவரி 13) திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி நகராட்சிக்குள்பட்ட 36 வார்டுகளில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து வாணியம்பாடி ஆற்றுமேடு பகுதியில் திமுக கொள்கைப்பரப்புச் செயலாளர் திண்டுகல் ஐ. லியோனி தேர்தல் பரப்புரை மேற்கொண்டார்.
அப்போது பேசிய அவர், "பிரதமர் எங்குச் சென்றாலும் திருக்குறளையும், பாரதியார் பாடல்களையும் மேற்கோள் காட்டுகிறார். விவசாயம், விவசாயிகள் பற்றி பேசுகிறார். ஆனால் டெல்லியில் போராடிய விவசாயிகள் மரணத்திற்கு அவர்தான் காரணம்.
வாணியம்பாடி பகுதியில் இஸ்லாமியர்கள் அதிகம் வாழ்கிறார்கள். தமிழ்நாட்டில் இந்து, கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்கள் ஒற்றுமையாக உள்ளனர். அவர்களின் ஒற்றுமையை யாராலும் பிரிக்க முடியாது.
பாஜக மதவெறியை மற்ற மாநிலங்களில் வைத்துக்கொள்ளட்டும் இது பெரியார் கோட்டை இங்கு எதும் பலிக்காது. திமுக தலைவர் ஸ்டாலின் உள்ளாட்சித் தேர்தலில் பெண்களுக்கு 50 விழுக்காடு இட ஒதுக்கீட்டைப் பெற்றுத் தந்தார்" என்று கூறினார்.
இதையும் படிங்க: தூத்துக்குடியில் மதச்சார்பற்ற இயக்கங்கள் கண்டன ஆர்ப்பாட்டம்