திருப்பத்தூர்: ஆம்பூரை அடுத்த மோதகப்பல்லி பகுதியை சேர்ந்தவர் சக்கரபாணி. இவர் உடல் நலக்குறைவு காரணமாக கடந்த 5 ஆம் தேதி இரவு ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு வந்தார். அப்போது அங்கு பணியில் இருந்த காவலாளி சுரேஷ் (30) என்பவர் சக்கரபாணியை சக்கர நாற்காலியில் அமர வைத்து வார்டுக்கு அழைத்து சென்றார்.
அங்கு மருத்துவர்கள் இல்லாததால் காவலாளி, சக்கரபாணியை படுக்கையில் படுக்க வைத்து குளுக்கோஸ் ஏற்றியதாக கூறப்படுகிறது. மேலும் சக்கரபாணியின் உறவினர்களிடம் சுரேஷ் பணம் கேட்டதாகவும், அவர்கள் தர மறுத்த நிலையிலும் கட்டாயப்படுத்தி பணம் பெற்றதாகவும் கூறப்படுகிறது.
சக்கரபாணிக்கு, காவலாளி குளுக்கோஸ் ஏற்றிய காட்சி சமூக வலைதளத்தில் வைரலானது. இந்த நிலையில் ஆம்பூர் அரசு மருத்துவமனையில் நோயாளிக்கு குளுக்கோஸ் ஏற்றிய காவலாளி சுரேஷை பணியிடை நீக்கம் செய்ய திருப்பத்தூர் மாவட்ட மருத்துவ பணிகள் இணை இயக்குநர் மாரிமுத்து உத்தரவிட்டார்.
இது குறித்து இயக்குநர் மாரிமுத்து கூறுகையில், மருத்துவமனையில் மருத்துவர்கள், நர்சுகளின் பணிகளை அங்கு பணியாற்றும் வேறு ஊழியர்கள் மேற்கொள்ளக்கூடாது. மருத்துவமனையில் பணியாற்றும் தூய்மை பணி ஊழியர்கள், தனியார் நிறுவன ஊழியர்கள் ஆகியோர் நோயாளிகளை கை தாங்கலாக அழைத்து செல்வது, படுக்கையில் இருந்து அவர்களை தூக்கி ஸ்ட்ரெச்சர் மூலம் அறுவை சிகிச்சை மையத்திற்கு அனுப்பி வைப்பது போன்ற பணிகளை மட்டுமே மேற்கொள்ள வேண்டும் என்றார்.
அதேபோல் நோயாளிகளிடம் பணம் வசூலிப்பது, அன்பளிப்பு பெறுவது போன்ற செயல்களில் ஈடுபட்டால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். காவல்துறையில் புகார் செய்து கைது நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என எச்சரிக்கை விடுத்தார்.
ஆம்பூர் அரசு மருத்துவமனையில் நடந்த சம்பவம் கூட நோயாளிக்கு காவலாளி குளுக்கோஸ் ஏற்றவில்லை. குளுக்கோஸ் பாட்டில் காலியானதாக உறவினர்கள் கூறியதால், அவர் வேறு பாட்டிலை மாற்றியுள்ளார். மருத்துவ ரீதியாக இது தவறு. உறவினர்களும் குளுக்கோஸ் மாற்றுவது உள்ளிட்ட நோயாளிகள் பற்றிய விவரங்களை மருத்துவர்களிடம் தான் தெரிவிக்க வேண்டும் என்றார்.
இதையும் படிங்க: அரசு மருத்துவமனையில் நோயாளிக்கு சிகிச்சை அளித்த காவலாளி - நடந்தது என்ன?